நைஜீரிய மற்றும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில் முக்கிய தலைவர் உட்பட 175 IS அமைப்பினர் உயிரிழப்பு

நைஜீரிய மற்றும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில் முக்கிய தலைவர் உட்பட 175 IS அமைப்பினர் உயிரிழப்பு

நைஜீரிய மற்றும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதல்களில், IS அமைப்பின் இரண்டாவது முக்கிய தலைவர் உட்பட 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக நைஜீரியாவும் அமெரிக்காவும் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளவில் மிகவும் தீவிரமான பயங்கரவாத அமைப்பு என வர்ணிக்கப்படும், IS அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகளுக்கான தலைவர் அபு-பிலால் அல்-மினுக்கி (Abu-Bilal al-Minuki), வடகிழக்கு நைஜீரியாவின் தொலைதூர கிராமமொன்றில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் போகோ ஹராம் (Boko Haram) மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்ற IS அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்க கிளை ஆகியவற்றால் கடுமையாக ஆயுதமேந்திய தீவிரவாதக் கிளர்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, இந்த 17 ஆண்டு கால மோதல்களின் காரணமாக இதுவரை 40,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கப் படையினர் நைஜீரியாவிற்கு வருகை தந்தது ஆலோசனை மற்றும் பயிற்சிகளுக்காக மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த பாரிய கூட்டுத் தாக்குதலின் மூலம் அமெரிக்க இராணுவம் அங்கு நேரடியாகவும் தீவிரமாகவும் இராணுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்து வருகின்றமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )