
மட்டக்களப்பில் கிராமிய வீதிகள், நீர் மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு வரவுசெலவுத் திட்டத்தில் முன்னுரிமை – ஜனாதிபதி உறுதி
கிராமிய வீதி அபிவிருத்தி, பாதுகாப்பான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் விசேட முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தின் போது, மாவட்டத்தின் நீர் தேவைகளை கூட்டாகக் கண்டறிந்து, குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கும் சமூக உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி திஸாநாயக்க அறிவுறுத்தினார்.
தேவைகளை மதிப்பீடு செய்வதற்கும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் இப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெரிய அளவிலான நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவடையும் வரை, பொதுமக்கள் தற்போது எதிர்நோக்கும் குடிநீர் சிரமங்களைக் குறைப்பதற்கு உடனடி தற்காலிக நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களுக்கும் அரசாங்கம் தேவையான நிதியை ஒதுக்கும் என்றும் அவர் கூறினார்.
மாவட்டம் முழுவதும் உள்ள வீதி மற்றும் பாலங்கள் அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்களைக் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, திட்டமிடப்பட்ட அனைத்து வீதித் திட்டங்களின் பணிகளையும் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வனவிலங்கு வலயங்களுக்குள் அமைந்துள்ள பயிர்ச்செய்கை நிலங்களால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் உட்பட மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலங்களை அணுகுவது தொடர்பாகப் பால் பண்ணையாளர்கள் நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கை குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
கிழக்கு மாகாண மீன்பிடித் தொழிலின் முக்கிய மையமான வாழைச்சேனை துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
இத்துறைமுகத்தை முழுமையாக நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் கலங்கரை விளக்கம் வசதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுத் தயார்நிலை, மனித-யானை மோதலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளின் அண்மைக்கால நிலவரங்கள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
தித்வா சூறாவளியினால் சேதமடைந்த பயிர்ச்செய்கை நிலங்கள் தொடர்பான இழப்பீட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல் மற்றும் புதிய வீடமைப்பு அலகுகளை நிர்மாணித்தல் குறித்தும் ஜனாதிபதி திஸாநாயக்க கேட்டறிந்தார். அத்துடன் இந்நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூடுதலாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் “பிரஜாசக்தி” திட்டத்தை செயல்படுத்துதல், அதன் முன்னேற்றம் மற்றும் அதனை முன்னோக்கி கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

