
காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த ஹபுத்தளை – தம்பேதென்ன வீதியில் உள்ள மருந்தகம் முற்றுகையிடப்பட்டது
ஹப்புத்தளை, தம்பேதென்ன வீதியில் அமைந்துள்ள மருந்தகமொன்றில் காலாவதியான மருந்துகள் மற்றும் விலை மாற்றப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் திடீர் முற்றுகையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகையின் போது, காலாவதியான மருந்துகளை விற்பனைக்காக வைத்திருந்தமை, மருந்துகளின் அசல் விலைகளை மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்தமை மற்றும் அச்சிடப்பட்ட விலையை அழித்து வேறு விலையைக் குறிப்பிட்டிருந்தமை உள்ளிட்ட பல சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.
சட்டவிரோத மருந்துத் தொகுதி அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரான வர்த்தகருக்கு எதிராக பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோர் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போது உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி மற்றும் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ஆகியவற்றை நன்கு சரிபார்க்க வேண்டும் எனவும், விலைகள் மாற்றப்பட்டிருப்பது போல் தெரிந்தால் அவற்றைக் கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

