
சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும் நாட்டை கட்டியெழுப்ப கைகோர்க்க வேண்டும் – பிரதமரின் ஈஸ்டர்வாழ்த்துச் செய்தி
அனைத்து வேறுபாடுகளையும் களைந்து, சகோதரத்துவமும் அமைதியும் கொண்ட ஒரே மனிதக் குடும்பமாக இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நிகழ்வை ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர். மரணத்தின் பின்னர் உயிர்த்தெழுந்த கிறிஸ்து உலகிற்கு வழங்கிய செய்தி என்னவென்றால், இருளை வென்று ஒளியையும், அச்சத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் அடைய முடியும் என்பதாகும்.
நமது வாழ்வில் பல்வேறு சவால்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் வருவது இயல்பானது. இருப்பினும், எந்தவொரு இருண்ட இரவும் நிரந்தரமானது அல்ல என்பதையும், ஒவ்வொரு சவாலுக்கும் பிறகு நம்பிக்கையின் விடியல் பிறக்கும் என்பதையும் ஈஸ்டர் செய்தி நமக்கு நினைவூட்டுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கவும், தளராத உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் நம்மை ஊக்குவிப்பதாக ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் துரதிர்ஷ்டவசமான யுத்த நிலைமையால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது. வெறுப்பு மற்றும் மோதல்களுக்குப் பதிலாக பேச்சுவார்த்தையும் புரிந்துணர்வும் மேலோங்கும், யுத்த அச்சம் நீங்கிய அமைதியான உலகம் பிறக்க வேண்டுமென இந்தப் புனித ஈஸ்டர் தினத்தில் பிரார்த்திப்பதாக பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்து போதித்த அன்பு மற்றும் அமைதியின் செய்தியை முன்னிறுத்தி, நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத பண்புகளால் போஷிக்க வேண்டும் என்றும் தனது ஈஸ்டர் தின வாழ்த்துச்செய்தியில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

