வலிமையான அரசையும் சமூகத்தையும் உருவாக்குவது பொதுவான பொறுப்பாகும் – எதிர்க்கட்சி தலைவரின் ஈஸ்டர் வாழ்த்து செய்தி

வலிமையான அரசையும் சமூகத்தையும் உருவாக்குவது பொதுவான பொறுப்பாகும் – எதிர்க்கட்சி தலைவரின் ஈஸ்டர் வாழ்த்து செய்தி

நம்பிக்கை மற்றும் அமைதியின் அடிப்படையிலான சமூகத்தைக் கட்டியெழுப்புவது அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில், அதற்கான பலமான அரசையும் சமூகத்தையும் உருவாக்குவது அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நம்பிக்கைகளுடன் ஈஸ்டர் ஞாயிறு கொண்டாடப்பட்டாலும், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் வேதனையான நினைவுகள் இன்னும் நீடிக்கின்றன. இத்தாக்குதலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் உறவினர்களை இழந்த மக்களுக்கு நீதியை நிலைநாட்ட கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்களால் முடியாமல் போனது ஒரு நாடு என்ற ரீதியில் பாரிய தோல்வியாகும் என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட உண்மையை வெளிப்படுத்துவது அரச கட்டமைப்பின் அத்தியாவசிய பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

” ஈஸ்டர் பெருவிழா என்பது நம்பிக்கை, மீண்டெழுதல் மற்றும் ஒரு சமூகமாக புதிய ஆரம்பம் குறித்து நமக்கு நினைவூட்டும் ஒரு புனிதமான சந்தர்ப்பமாகும். இந்த ஆசீர்வாதம் நிறைந்த நாளில், இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இயேசு கிறிஸ்து தீமையை வென்று உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவு கூர்ந்து உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள் ஈஸ்டர் பெருவிழாவை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இறைமகனான இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து 40 நாட்கள் தவக்காலத்தைக் கழித்த கிறிஸ்தவர்கள், நோன்பிருந்து மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஈஸ்டர் பெருவிழாவில் இணைந்து கொள்கின்றனர்.

புதிய எதிர்பார்ப்புகளுடன் ஈஸ்டர் பெருவிழாவைக் கொண்டாடினாலும், 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நமது நாட்டின் தேவாலயங்கள் மற்றும் சில ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலின் வேதனையான நினைவுகள் இன்னும் நமது இதயங்களில் நீடிக்கின்றன. 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற இந்த அழிவுகரமான தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த நமது நாட்டு மக்களுக்கு இன்னும் நீதியை நிலைநாட்ட கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்களால் முடியாமல் போனது ஒரு நாடு என்ற ரீதியில் நாம் அடைந்த பெரும் தோல்வியாகவே நான் கருதுகிறேன்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த மிலேச்சத்தனமான தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை நிலைநாட்டுவதும், உண்மையை வெளிப்படுத்துவதும் எமது அரச கட்டமைப்பிற்குரிய அத்தியாவசியப் பொறுப்பும் கடப்பாடும் ஆகும். இந்தப் பொறுப்பிலிருந்தும் கடப்பாட்டிலிருந்தும் எவரும் விடுபட முடியாது. அதற்காக சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை தொடர்ச்சியாகப் பேணுவது மிகவும் முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே நான் கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதை இன்றும் வலியுறுத்துகிறேன்.

நமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்து, நம்பிக்கை மற்றும் அமைதியின் அடிப்படையிலான சமூகத்தைக் கட்டியெழுப்புவது நம் அனைவரினதும் பொதுவான பொறுப்பாகும். அதன் மூலம் மீண்டும் இத்தகையதொரு அனர்த்தம் ஏற்படாத வகையில் ஒரு வலுவான அரசையும் சமூகத்தையும் உருவாக்குவது நம் அனைவரினதும் கடமையாகும்.

இந்த ஈஸ்டர் நாளில், பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளுக்கு மதிப்பளித்து, நீதி, அமைதி மற்றும் ஒற்றுமைக்காக நம்மை அர்ப்பணித்து, உண்மையை வெளிப்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம்.”நம்பிக்கை மற்றும் அமைதியின் அடிப்படையிலான சமூகத்தைக் கட்டியெழுப்புவது அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )