
இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின்வேலை நிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆரம்பித்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றைய தினமும் (05) தொடர்கின்றது.
அரசியல் தலையீடுகளின் அடிப்படையில் வைத்தியர்களின் இடமாற்றங்களை மேற்கொள்வதை நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தது.
அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்படுகிறது.
எனினும் மகப்பேறு வைத்தியசாலைகள்,சிறுவர் வைத்தியசாலைகள்,
மஹரகம அபேக்ஷா (புற்றுநோய்) வைத்தியசாலை,
விசேட சிறுநீரக அலகுகள்,முப்படை வைத்தியசாலைகள்,
தேசிய மனநல நிறுவனம் (முல்லேரியா) ஆகிய
வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில், ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அடுத்தகட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

