அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒரே இலங்கை குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம் – ஜனாதிபதியின் ஈஸ்டர் தினச் செய்தி

அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒரே இலங்கை குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம் – ஜனாதிபதியின் ஈஸ்டர் தினச் செய்தி

கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னதமான பண்புகளால் நிரப்பி, அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒரே இலங்கை குடும்பமாக முன்னோக்கிச் செல்ல கைகோர்க்குமாறு அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (05) கொண்டாடப்படும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் யுத்த நிலைமையால் உலக மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும், விரோதப் போக்கிலான போருக்குப் பதிலாக உலக மக்கள் அனைவரும் அமைதியையும் சகவாழ்வையுமே பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்து நாதரின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் ஈஸ்டர் ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர். இது நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் கருணையின் நித்திய சக்தியை நினைவூட்டும் ஒரு சந்தர்ப்பமாகும்.

மத ரீதியான நிகழ்வாக மட்டுமன்றி, ஈஸ்டர் பெருவிழா என்பது மனிதநேயம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை குறித்து மீண்டும் சிந்திக்க வைக்கும் ஒரு கலாசார விழாவாகும். மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் இருளை வென்று ஒளியையும், அச்சத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் அடைய முடியும் என்பதைத் தனது வாழ்க்கை முன்மாதிரியின் மூலம் உலகிற்கு உணர்த்தினார்.

இந்த தருணத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த நிலைமையால் உலக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வதை நாம் மறந்துவிட முடியாது. பகைமையை அடிப்படையாகக் கொண்ட போருக்குப் பதிலாக, உலக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையுமே எதிர்பார்க்கிறார்கள். இந்த புனிதமான ஈஸ்டர் விடியலில், அமைதிக்கான பாதை திறக்கப்பட வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.

கிறிஸ்துவின் போதனைகளின்படி நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத பண்புகளால் நிரப்பி, ஒரு தாயின் பிள்ளைகளைப் போல பேதங்களை மறந்து, இதயத்தால் ஒன்றிணைந்து ஒரே இலங்கை குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம்! அதற்காக சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்!

துயருற்ற மக்களின் இரட்சிப்புக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் மரணத்தின் இருளைத் தோற்கடித்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் இந்த புனிதமான ஈஸ்டர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மற்றும் உலகவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் கருணையும் அமைதியும் நிறைந்த இனிய ஈஸ்டர் பெருவிழா நல்வாழ்த்துக்கள்!

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )