தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை மொழிக்கொள்கையில் தெளிவாக உள்ளது

தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை மொழிக்கொள்கையில் தெளிவாக உள்ளது

முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

மத்திய பாஜக அரசுதான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது. திமுக அரசு, அரசியல் சட்டத்தை மதிக்கினது. ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டத்தையே சிதைக்கும் வேலையை செய்கிறது.

திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல. வலிந்து திணிக்கும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும். இந்தி ஆதிக்கத்தில் இருந்து இந்திய மொழிகளை காப்பது திராவிட இயக்கத்தின் மொழிக்கொள்கைதான். தாய்மொழியை காக்க தமிழகம் போட்டுத்தந்த பாதையையே பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன; தமிழ் உள்பட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்க வேண்டும்.

ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கும் முயற்சிதான் இந்தித் திணிப்பு. இதை நேரடியாக சொன்னால் தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாது, மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்பதால்தான் மும்மொழிக் கொள்கையில் இந்தியை வலியுறுத்தவில்லை என்றும், ஏதேனும் ஒரு மொழியை படிக்கலாம் என்றும் பாஜக அரசு பசப்புகிறது.

பாஜக அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் குடும்பத்தினர் வயிற்றில் அடிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் எனப் பிடிவாதமாக உள்ளதால் நிதியை இழக்க வேண்டியுள்ளதே என சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை, தன்னுடைய மொழிக்கொள்கை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறது. இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்; இந்தித் திணிப்பை எதிர்ப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)