
டியுசன் எடுத்தாவது இந்த கொலை கலாசாரத்தை நாட்டில் இருந்து துடைத்தெறியுங்கள்
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தூண்களில் ஒன்றான பொலிஸ் துறையும், நீதித்துறையும் இன்று ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. சந்தேக நபர்களை நீதிமன்ற அறையில் கொலை செய்கின்றனர்.
நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மீது காணப்படும் அச்சம் பயம் மரியாதை முற்றாக இல்லாது போயுள்ளன. நீதிமன்ற அறையில் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது நீதிபதிகளுக்கு ஏற்படும் அதிர்ச்சியை சொல்லி முடிக்க முடியாது. இனியும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்பதற்கு அரசாங்கம் என்ன உத்தரவாதத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் நீதிபதிகளுக்கும் வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இன்று (14) பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இத்தருணத்திலும் கூட நீதிமன்றத்தில் கொலையை திட்டமிட்ட பெண்ணும், முன்னால் பொலிஸ் மா அதிபரும் நீதிமன்ற பிடியாணையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளனர். பொலிஸாரால் கூட முன்னாள் பொலிஸ்மா அதிபரைக் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டின் பொது மக்கள் பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது. நேற்று (13) பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
கம்பஹா வெலிவேரிய பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அகுனுகொலபலஸ்ஸ பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மீகஹகிவுல, தல்தென, மூதூர் போன்ற பிரதேசங்களிலும் கொலைகள் இடம்பெற்று வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இத்தகைய பின்னனியில், பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது. இதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். வீதிகளில் கொலை, வன்முறை, மற்றும் பயங்கரவாதம் என முழு சமூகத்திலும் பயங்கரம் ஆட்கொண்டுள்ளது.
இவற்றை கட்டுப்படுத்த, யாரிடமாவது டியூஷன் எடுத்து இந்த கொலை அலையை தடுக்க அரசங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.