
பிரான்ஸ் கூட்டுப் படை தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரான்ஸ் படைகளின் கூட்டுப் படை தளபதி ரியர் அட்மிரல் ஹக்கஸ் லைன், பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்துள்ளார்.
பிரான்ஸ் தூதுக்குழுவில் இலங்கைக்கான பிரான்ஸ் துணைத் தூதுவர், புதுடில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர், நாட்டுக்கு விஜயம் செய்திருந்த பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. பொதுவான பாதுகாப்பு சவால்களை நிவர்த்தி செய்வதற்கான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மைக்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு தெரிவித்ததுடன், பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இலங்கையின் புவியியல் இருப்பிடத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், கடல்சார் கள விழிப்புணர்வு, மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் அனர்த்த மீட்பு போன்ற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தை ரியர் அட்மிரல் வலியுறுத்தினார்.