
உலக வங்கியின் 2025 பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் கலந்துகொண்டார்
‘அனைவருக்குமான டிஜிட்டல் பாதை’ எனும் தொனிப்பொருளின் கீழ் வொஷிங்டன் டீ.சீ.யில் உலக வங்கியின் தலைமையகத்தில் மார்ச் 17ம் திகதியிலிருந்து 20ம் திகதி வரை உலக வங்கி குழுமத்தின் 2025 பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கலந்துகொண்டார்.
இந்த மாநாடு டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் பொருளாதார, சமூக அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வது மற்றும் அதன் பங்கினை ஆராயும் நோக்கில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல்மயப்படுத்தல் செயற்பாடுகளுக்கென இந்த மாநாடு மிகவும் முக்கியமானதாகும்.
இலங்கையின் நிரந்தர டிஜிட்டல் பரிணாமத்தை முன்னிட்டு வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உபாய மார்க்கங்கள் தொடர்பில் பூகோள நிபுணர்களுடன் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ தனது கருத்துக்களைப் பரிமாற்றிக்கொண்டார்.
பூகோள டிஜிட்டல் மாநாட்டிற்கு இணைவாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் பிரதம அதிகாரிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன், சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பீ.கே.ஜீ.ஹரிச்சந்த்ர உள்ளிட்டவர்களையும் சந்தித்தார்.
இலங்கையின் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதிகளின் (EFF) முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் 2025 பெப்ரவரி மாதத்தில் EFF இன் கீழ் மூன்றாவது மீளாய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் IMF நிறைவேற்றுக் குழுவின் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் பணிக் குழு வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமரின் செயலாளர் நன்றி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள EFF மீளாய்வின் மைல்கல்லை பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்குமென பிரதமரின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
பாதிப்புக்குள்ளாகும் சமூகத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்குதல், வரி செயன்முறையின் செயற்திறனை மேம்படுத்தல் மற்றும் முழு பொருளாதார பயன்களையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட அரசின் தொடர்ச்சியான டிஜிட்டல்மயப்படுத்தல் முயற்சிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கு உலக வங்கி வழங்கும் பூரண ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து, உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரயிசர் அவர்களுடனும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவது மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கென உலக வங்கியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு பெற்றுக்கொடுக்கப்படுமென ரயிசர் அவர்கள் இதன்போது உறுதியளித்தார்.
நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கென தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் தேவைப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமர் ஊடக பிரிவு