
கண்டியில் 58 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
கண்டி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களிடமிருந்து 210 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றன எனவும், அவற்றுள் 58 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன எனவும் கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி இந்திக உடவத்த தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும் அவர் , ”ஒரு மாநகரசபை, 4 நகரசபைகள், 17 பிரதேச சபைகள் என கண்டி மாவட்டத்தில் மொத்தமாக உள்ளுராட்சிசபைகளுக்கு 22 சபைகளுக்கு வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன.
நேற்று நண்பகல் 12 மணிவரை அங்கீகரிக்கப்பட்ட 186 அரசியல் கட்சிகளிடம் இருந்தும், 24 சுயாதீன குழுக்களிடம் இருந்தும் 210 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றன.
அவற்றை பரிசீலித்த பிறகு 152 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 58 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 52 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினதும், 6 சுயேச்சைக்குழுக்களினதும் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.
நாவலப்பிட்டிய நகரசபை, மெததும்பர பிரதேச சபைக்குரிய வேட்பு மனுக்களில் ஒன்றேனும் நிராகரிக்கப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.