
ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் முதல் பெண் தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு
சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் அதிகாரமிக்க, வலிமைமிக்க பதவியான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி) கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தார். பதவிகாலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஐ.ஓ.சி.யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 18-ந்திகதி தொடங்கியது.
நிதி நிலை, எதிர்கால போட்டிக்குரிய சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று ஐ.ஓ.சி.யின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
தலைவர் பதவிக்கு முன்னாள் நீச்சல் வீராங்கனையும், ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை மந்திரியுமான கிறிஸ்டி கவன்ட்ரி, உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ (இங்கிலாந்து), ஐ.ஓ.சி. நிர்வாக குழுவின் துணைத்தலைவர் ஜூவான் ஆன்டோனியா சமராஞ்ச் (ஸ்பெயின்) சர்வதேச சைக்கிளிங் சங்க தலைவர் டேவிட் லாப்பரடின்ட் (பிரான்ஸ்), ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மோரினாரி வதானாப் (ஜப்பான்), சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ் (இங்கிலாந்து), ஜோர்டான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் ஆகிய 7 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் ஐ.ஓ.சி.யின் 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக 49 வாக்குகள் பெற்ற கிறிஸ்டி கவன்ட்ரி வெற்றி பெற்று புதிய தலைவர் ஆனார்.
2-வது இடத்தை பிடித்த ஜூவான் ஆன்டோனியா சமராஞ்சுக்கு 28 வாக்குகள் கிடைத்தது. எதிர்பார்க்கப்பட்ட செபாஸ்டியன் கோ 8 ஓட்டுகளே பெற்றார்.
இதன் மூலம் 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற புதிய சரித்திரத்தை கவன்ட்ரி படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 9 ஆண்கள் மட்டுமே தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். அத்துடன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த உயரிய பொறுப்புக்கு வந்த முதல் நபர் மற்றும் இளம் வயதானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
41 வயதான கிறிஸ்டி கவன்ட்ரி முன்னாள் நீச்சல் வீராங்கனை ஆவார். 2004, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருக்கிறார்.
உலக நீச்சல் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டியிலும் நிறைய பதக்கங்களை குவித்து இருக்கிறார்.
ஒலிம்பிக் தினமான ஜூன் 23-ந் தேதி அன்று ஐ.ஓ.சி.யின் 10-வது தலைவராக அவர் முறைப்படி பொறுப்பேற்பார். இந்த பதவியில் அவர் 8 ஆண்டுகள் நீடிப்பார்.
இந்த காலக்கட்டத்தில் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக், 2032-ம் ஆண்டு பிரிஸ்பேன் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு காத்திருக்கிறது.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்துவதற்கான உரிமத்தை பெற இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பதை இவரது தலைமையிலான கமிட்டியே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு இளம் வீராங்கனையாக நீச்சல் பயணத்தை தொடங்கிய போது இது போன்ற ஒரு தருணத்தை அடைவேன், இப்படியொரு இடத்தில் நிற்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஐ.ஓ.சி.யின் முதல் பெண் தலைவராக இருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. நான் பெற்ற ஓட்டுகள் நிறைய பேருக்கு உத்வேகம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.