
சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்றால் என்ன ?
‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ என்பது இதயத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும். இதை உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.
உலகளவில் ஏற்படும் மாரடைப்புகளில் 22 முதல் 60 சதவிகிதம் சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சுவலி அல்லது இடது தோள்பட்டை, கழுத்து, முதுகு, தாடை போன்ற இடங்களில் வலியையும், வயிறு எரிச்சல், குமட்டல், வாந்தி, வியர்த்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.
ஆனால் மேற்கூறிய எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலோ அல்லது மிக குறைவான அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்படுவது சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வேறு காரணங்களுக்காக சில நாட்கள் கழித்து மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் செய்யும் போது தான் தற்செயலாக கண்டறியப்படுகிறது.
இது ஏற்பட ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, உடல் பருமன், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், அதிக தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், பரம்பரை இதய நோய்கள் போன்றவை முக்கிய காரணிகளாகும்.
சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட முதன்மைக் காரணம் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் கரோனரி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் கட்டிகளால் ஏற்படும் அடைப்பு.
சில சமயங்களில் கரோனரி ரத்த நாளங்களின் இறுக்கத்தால் கூட சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக இதயம் மற்றும் மார்பு பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சில சமயங்களில் மாரடைப்பின் அறிகுறிகளை அவர்களால் உணர முடியாமல் போகிறது. இவர்களுக்கு சோர்வு, வயிறு எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் அப்போது ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளின் அலட்சியத்தால் சில சமயங்களில் கண்டறிய தவறிய சைலன்ட் ஹார்ட் அட்டாக் தீவிர சிக்கலாக மாறி பக்க விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.