
பெண்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு பதிலளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு பதில் வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை ஐக்கிய நாடுகள் சங்கம், கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று (22) ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் வெற்றிகளுக்கும், சமூக அங்கீகாரத்திற்கும் உட்பட்ட மகளிர் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் அவர், ”சமூக, பொருளாதார அந்தஸ்து, கல்வி தகுதிகள், மதம், இனப் பாகுபாடு, அங்கவீனம் அல்லது வேறு எந்தவொரு அடையாளங்களையும் கவனத்திற்கொள்ளாது அனைத்து பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தேசத்தை வளப்படுத்திய சக்திவாய்ந்த பெண்கள் இருந்த நாடாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது. அவ்வாறான பலர் இன்று இந்த பார்வையாளர்கள் மத்தியில் இருப்பதை நான் அறிவேன்.
அரசியல் செயற்பாடுகள் மற்றும் சமூக செயற்பாடுகளின் மாற்றங்களுக்கு பெண்கள் தலைமைத்துவம் வழங்கி பரிணாமம்மிக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் நாம் அரசு என்ற அடிப்படையில் பல்வேறு கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஊடாக பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
2024 பெண்களை ஊக்குவிக்கும் சட்டத்தின் ஊடாக புதிய சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். பாலின சமத்துவத்தை நிறுவனமயமாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கையாக அது பார்க்கப்பட்டது.
கிராமிய பெண்களுக்கென தொழில் முயற்சியாண்மை மற்றும் டிஜிட்டல் நிதி கல்வியறிவு வேலைத்திட்டங்கள் மற்றும் பெண்கள் உட்பட முழு சமூகத்தினதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒன்பது அமைச்சுக்களை ஒதுக்கி தொழில் படையணியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டத்திலும் அவ்வாறான பல நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தலைமைத்துவம், தீர்மானங்களை எடுத்தல் மற்றும் பொருளாதாரத்திற்குள் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது.
பொருளாதார சந்தர்ப்பங்கள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் ஊடாக பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் அவர்களை ஊக்குவிப்பதற்கான சந்தர்ப்பங்களை அடையாளம் காண்பது உட்பட இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் பாராளுமன்றத்தினுள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை இருமடங்காக அதிகரித்துள்ளோம். எனினும் தொடர்ந்தும் 10 வீதம் மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
அரசியலைப் போன்று தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களிலும், தலைமைத்துவம் வகிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய தொழில்களில் பெண்கள் தொழில் படையணியின் பங்களிப்பு ஆண்கள் தரப்புடன் ஒப்பிடுகையில் 32 வீதமாகவே காணப்படுகிறது.
உங்களால் அனைத்தையும் செய்ய முடியுமென கூறி வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை என்பது பெண்களால் முடியாத காரியமென சிலர் கூறுகின்றனர்.
எம்மால் அனைத்தையும் செய்ய முடியாது. எம்மால் செய்ய இயலுமானதை செய்வதே எமக்கு தேவையானது. பெண்களை வரவேற்கும் குடும்பம் மற்றும் சமூகமொன்றை உருவாக்குவதே எமக்கு தேவையானது. பெண்களுக்கு கூடுதல் ஒத்துழைப்பை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதே தேவையானது.
இதற்கென ஊதியம் பெறாத பெண்களின் விருந்தோம்பல் செயற்பாடுகள் அடையாளம் கண்டு அவை பாராட்டப்பட வேண்டும்.
பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட துன்புறுத்தல்கள் மற்றும் பாகுபாடு காண்பிப்பது சமூகத்தில் எந்த இடத்திலும் இடம்பெறுகிறது. இவற்றை நிறுத்துவதற்கு அவசர சட்டங்கள் மற்றும் சமூக மறுசீரமைப்பு தேவையானதாகும்.
பாலின சமத்துவத்தை நோக்கிச் செல்லும் பயணம் நாம் தனித்து செல்லும் ஒன்றல்ல. ஐக்கிய நாடுகளின் நிரந்தர அபிவிருத்தி இலக்கு, விசேடமாக ஐந்தாவது இலக்கான பாலின சமத்துவத்திற்கென அர்ப்பணிப்புடன் செயலாற்றும் தேசமாக பெண்களை ஊக்குவித்தல் மற்றும் அதற்கென பூகோள ரீதியிலான முயற்சிகளுடன் சர்வதேச தொடர்புகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வேகமாக அபிவிருத்தியடையும் உலகிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கென நாம் பெண்களை ஊக்குவிப்பது மாத்திரமன்றி முற்றிலும் எமது தேசத்தின் அபிவிருத்திக்கும் பங்களிப்பை பெற வேண்டும். இங்கு இலங்கையானது, ஐக்கிய நாடுகள் சபையில் பெண்களின் உரிமைகளுக்கான வலுவான ஆலோசனை தரப்பாக உள்ளது.
தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அவற்றிற்கு பதில் வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை ஐக்கிய நாடுகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.எம்.ருஷான்ஹவுதீன், உதவி பொதுச் செயலாளர் பன்ச்சலீ ரத்னாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு