
அறிவாற்றலை பாதிக்கும் அதிகப்படியான சர்க்கரை
அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது அதிக உடல் பருமன், இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்க குழந்தைகள் சராசரியாக 17 தேக்கரண்டி சர்க்கரையை தினமும் உட்கொள்வதாக அந்த நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் மிக மோசமான உடல் பாதிப்புகளை கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் என்று உணவு துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதிகப்படியான சர்க்கரை உணவில் தொடரும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதல் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுவயதில் அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாட்டையும் பாதித்து அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக, இனிப்பு என்பது சீனி, சர்க்கரை மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை அனைத்திலும் கலந்திருப்பதால் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை குறைத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.