
என் மனைவி மீது கை வைக்க வேண்டாம்
‘என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், என் மனைவி மீது கை வைக்க வேண்டாம். ஜனாதிபதியிடம் இதனை நான் கூற விரும்புகிறேன்’’ என முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இந்த வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக கண்டி சஹஸ் உயனேயில் நேற்று முன்தினம் (02) நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ‘‘நான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தான் இன்னும் இருக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவால்தான் நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம்.
அவர் இந்த நாட்டைக் காப்பாற்றியவர். ஆனால், இன்று என்ன நடக்கிறது? நாட்டில் நடக்கும் விடயங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. நாங்கள் இந்த நாட்டுக்கு இவ்வளவு செய்தும் நாங்கள் செய்தவற்றை மக்கள் மறந்துவிட்டார்கள்.
159 எம்.பிக்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பினாலும் இதுவரை அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இரண்டு வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.
என்னை சிறை அனுப்பியது ஒன்று. என் மனைவியை அனுப்பியது இன்னொன்று. ஜனாதிபதியே! இது வெட்கமான வேலை. இன்று தலதா மாளிகை கண்காட்சியொன்றைச் செய்கிறார்கள்.
இந்த மாளிகைக்கு வெடிவைத்தவர்கள் யார்? ஜே.வி.பியும் புலிகளும் தான். இவர்கள் முதலில் இங்கு வந்து மகாநாயக்க தேரர்களை வணங்க வேண்டும். இது பெளத்த நாடு. ஆனால், என்ன நடக்கிறது?
யாழ்ப்பாணத்தில் விகாரைக்குச் சென்று தானம் வழங்கச்சென்ற இராணுவத்தினர் இராணுவத்தளபதியால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், திருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்துச்சென்று தாக்குதல் நடத்தும் சம்பவமொன்றையும் காணொளியில் கண்டேன். இதுவா நாட்டுக்குத் தேவை? மஹிந்த இதனையா எங்களுக்கு வழங்கினார்? நான் இனவாதம் பேசவில்லை.
ஆனால், இப்போது மாற்றம் தேவை. உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கு ஆதரவளித்து அரசாங்கத்துக்கு செய்தியொன்றைச் சொல்லுங்கள். ஜனாதிபதிக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். சிறையில் அடையுங்கள். எனக்கு கவலையில்லை. ஆனால், எனது மனைவி மீது கைவைக்காதீர்கள். அப்படி வைத்தால் அடுத்து நான் என்ன செய்வேன் என்பது எனக்குத் தெரியும்’’ என தெரிவித்துள்ளார்.