
மூன்று மதங்களை இணைத்து உருவாகும் புதிய மதம் – இந்திய இமாம் பரபரப்பு தகவல் !
உலகின் 3 முக்கிய மதங்களை இணைத்து புதிய மதம் உருவாக்கப்பட்டு வருவதாக அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவராக உள்ள இமாம் உமர் அகம்மது இலியாஸி(Imam Umer Ahmed Ilyas) கூறியுள்ளார்.

இவர் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்று, இந்த விழா நாட்டின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் விதமாக அமையும் என கூறி, கடும் விமர்சனங்களை பெற்றார்.
தற்போது, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்களை கொண்ட புதிய மதம் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர்,
”இந்த மூன்று மதங்களும் பொதுவான மூதாதையரையும், வேர்களையும் பகிர்ந்து கொண்டிருந்தாலும், பெரும்பாலும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இந்த 3 மதத்தினரையும் இணைத்தால் மோதல்கள் குறையும்.
அவர்கள் உறவினர்கள், சகோதரர்கள் என்றாலும், அவர்களை ஒன்றிணைக்க ஒரே வழி ஒரே மதம் தான். இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன. 3 மதங்களுக்கும் ஒரே ஆதாரம் ஒரே மூலம் தான். இறைவன் ஒருவனே என்பதும் முக்கிய கொள்கை” என கூறியுள்ளார்.
இந்த புதிய மதத்தின் பெயர் ‘ஆபிரகாமிய நம்பிக்கை’ என தெரிவித்துள்ள அவர், இதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.
மூன்று மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கட்டப்பட்ட ஆபிரகாமிய நம்பிக்கை மையம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு மையம் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நிறுவப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.