
வடக்கில் 5,941 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதை நிறுத்த அரசாங்கத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வட மாகாணத்தில் உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிகள் யசந்த கோத்தாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனனர் .
இந்த மாதம் 28 ஆம் திகதிவரை வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள உரிமை கோரப்படாத நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடபட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
இன்றுடன் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு நிறைவடையும் தருவாயில் நீதிமாற்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கமைவாக நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் 5,941 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு குறித்த வர்த்தமானி அறிவிப்பினூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார் .
வட மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நிலங்களின் உரிமையாளர்கள் தற்போது வெளிநாடுகளில் இருப்பதால், சில நிலங்களுக்கான உரிமை ஆவணங்கள் தெளிவாக இல்லை . இதனால் இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி அரசாங்கம் நிலங்களை கையகப்படுத்துவது , வட மாகாண மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகுமென மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வடமாகாண மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக ஒரு தீர்ப்பை வெளியிட வேண்டும் எனவும் , தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பை செயல்படுத்துவதைத் தடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

