கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி நடிகை சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் தனது 87ஆவது வயதில் இன்று காலமானார்.

அன்னாரின் மறைவிற்கு தமிழ், கன்னடம், தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .

சரோஜா தேவி 1955 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பின்னர் 1957ல் தங்கமலை ரகசியம் படத்தில் தமிழில் நடித்த சரோஜா தேவிக்கு 1958ல் எம்.ஜி.ஆருடன் நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

1957 முதல் 1970 வரை தமிழ், கன்னடம், தெலுங்கு திரையுலகை சரோஜா தேவி ஆட்சியே கோலோச்சியது
என சொல்லலாம்.

திருடாதே, எங்க வீட்டு பிள்ளைம் அன்பே வா, படகோட்டி, பாசம், காவல்காரன், கலங்கரை விளக்கம், பணத்தோட்டம், தர்மம், பெரிய இடத்து பெண், அரச கட்டளை, தாய் சொல்லை தட்டாதே, ஆசை முகம் என எம்.ஜி.ஆருடன் அடுத்தடுத்து 25 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

புதிய பறவை சபாஷ் மீனா, எங்கள் குடும்பம் பெருசு, இரும்புத்திரை, விடிவெள்ளி, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும் என வரிசையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சுமார் 22 படங்களில் நடித்திருக்கிறார்.
அதேபோன்று ஜெமினி கணேசனுடனும் 17 படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய்யின் ஒன்ஸ் மோர், சூர்யாவின் ஆதவன் படங்களின் மூலம் 90ஸ் கிட்ஸிற்கும் பரீட்சயமானவர் சரோஜா தேவி.

1938ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் சரோஜா தேவி. வீட்டின் நான்காவது மகள் ஆவார்.

1967ல் திருமணம் செய்து கொண்ட பிறகும் சரோஜா தேவிக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ந்தன.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்த சரோஜா தேவியின் திரையுலக பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக 1969ல் பத்ம ஸ்ரீ, 1992ல் பத்ம பூஷன், 2008ல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

2009ல் தமிழக அரசு சரோஜா தேவிக்கு கலைமாமணி விருது வழங்கியதுடன் அதே ஆண்டு கர்நாடக அரசு டாக்டர். ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதையும், 2009ல் ஆந்திர அரசு இரண்டாவது முறையாக 2001ஆம் ஆண்டை தொடர்ந்து என்.டி.ஆர் தேசிய விருதை வழங்கி கெளரவித்தது.

அத்துடன் அக்காலத்தில் இருந்த பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் .

முகபாவனையில் நவரசங்களையும் அழகாக வெளிப்படுத்தும் அவரின் திறமையால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சரோஜா தேவி அபிநயா சரஸ்வதி என்ற பட்டம் சூட்டப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )