
கோவில் கூட்ட நெரிசல் சிக்கி 6 பேர் பலி
வடஇந்தியாவில் உள்ள மிக முக்கியமான 7 அம்மன் ஆலயங்களில் ஒன்றாக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் புகழ் பெற்ற மாதா மன்சா தேவி அம்மன் ஆலயம் உள்ளது.

தற்போது ஆடி மாதம் என்பதால் மாதா மன்சா தேவி அம்மன் ஆலயத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்பதற்காக இன்று (27) அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த ஆலய வளாகத்தில் திரண்டுள்ளனர்.

அப்போது கூட்டத்தில் ஒரு பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த திடீர் குழப்பத்தால் நிலைகுலைந்த பக்தர்கள் குழப்பத்தில் தவிப்புக்குள்ளானதால் அந்த பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

கடும் நெரிசல், கூச்சல் காரணமாக 6 பக்தர்கள் நெரிசலுக்குள் சிக்கி கோவில் வளாகத்துக்குள்ளே உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் கோவில் வளாகத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

