
தர்ம சக்கர ஆடை விவகாரம் ; நீதிமன்றத்தின் உத்தரவு
2019 ஆம் ஆண்டு “தர்ம சக்கரம்” பொறித்த ஆடையை அணிந்ததற்காக பெண் ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்த ஹசலக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளது.
குறித்த பெண் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட, நீதிபதிகளான குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரின் ஒப்புதலுடன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி, கைது நடவடிக்கையை மேற்கொண்ட ஹசலக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சந்தன நிஷாந்த, மனுதாரருக்கு தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 30,000 ரூபாவை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரரை ‘தர்ம சக்கரம்’ பொறித்த ஆடையை அணிந்ததற்காக பொலிஸார் கைது செய்ததாகவும், ஆனால் அது ஒரு கப்பலின் சுக்கானம் என்பது பின்னர் தெரியவந்தது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
2019 மே 17ஆம் திகதி ‘தர்ம சக்கரம்’ பொறித்த ஆடையை அணிந்ததற்காக குறித்த பெண் ஹசலக பொலிஸ் பிரிவினாரல் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

