
தேசபந்துவிற்கு போன்று தமிழின அழிப்புகளுக்கும் நீதி விசாரணை வேண்டும் – இன்று பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் MP
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவரவுள்ள நீதியை தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கொண்டுவரவும் தமிழினப் படுகொலைகள். கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகளுக்கும் நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் அதில் சாட்சியமளிக்க தான் தயார் என மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையை அவர் இன்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரகேசரி பத்திரிகையை சபா பீடத்திற்கு சமர்ப்பித்த ஸ்ரீதரன், ”சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்கத் தயார் ”என கிருஷாந்தி குமாரசாமி வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச அறிவித்துள்ளமையை ஸ்ரீதரன் MP சுட்டிக்காட்டினார்.
”அவருடைய மனைவி ஜனாதிபதிக்கு கடிதம் என்ற செய்தி வந்துள்ளது. அவருடைய மனைவி ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு, நீதி அமைச்சருக்கு சிங்களத்தில் எழுதிய கிட்டத் தட்ட 6 பக்கங்களைக் கொண்ட கடிதத்தையும் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இங்கே நடந்த மிக மோசமான மனிதப்படுகொலைகளுக்கு சாட்சியமளிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு வரத் தயார் என்கின்றார். ஆகவே இந்த செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்சவை நீங்கள் சர்வதேச விசாரணைக்கு தயார்படுத்த வேண்டும்” எனவும்பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.
செம்மணி குறித்து சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றும் சிறிதரன் கேள்வியெழுப்பினார்.
”மக்கள் பட்ட துயரங்கள் அனுபவித்த சித்திரவதைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களோடு சம்பந்தப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவே அரசாங்கத்தால் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.நாமும் இதே துன்பங்களை, சித்திரவதைகளை, சந்தித்த ஒரு இனம் என்ற வகையிலும் தொடர்ச்சியாக இந்த நாட்டிலே பல்வேறுபட்ட பொலிஸ் அராஜகங்களுக்கும் இராணுவ அராஜகங்களுக்கும் முகம் கொடுத்து இன்றுவரை வாழ்கின்ற இனம் என்ற அடிப்படையில் இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்கின்றோம்.காரணம் நீதி என்பது அனைவருக்கும் சமமானது’‘ எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டார்.
”எத்தனையோ ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.பயங்கரவாத தடைச்சட்டம் பலரின் மரணங்களுக்கு காரணமாக அந்த சட்டம் இருந்துள்ளது.
இந்த சட்டத்தை தமது கையில் வைத்திருந்த பொலிஸார் செய்த அநியாயங்கள் பலவுண்டு”.
”செம்மணியில் நேற்று வரைக்கும் 155 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கு இன்னும் பல எலும்புக்கூட்டு வயல்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு தமிழர்களுடைய எலும்புக்கூட்டுத்தொகுதிகள் வெளிவரக்காரணமாக உள்ள கொலையாளிகள் யார்?” எனவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

