
பாதுகாப்பை உறுதிசெய்யாது விற்பனைக்கு வைக்கப்பட்ட எரிவாயு அடுப்புக்கள்கிராண்ட்பாஸில் கண்டுபிடிப்பு
தரநிலைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யாத ஒரு தொகை எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியது .
இந்த எரிவாயு அடுப்புக்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறபட்ட போதிலும் அவை பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, நாட்டில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறி சந்தைக்கு வெளியிடத் தயாராக இருந்தமையும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குக் கிடைத்த ரகசிய தகவலுக்கமைய ,கடந்த 7 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் சோதனை செய்யப்பட்டது.
இதன்போது தரநிலை உறுதிசெய்யப்படாத ,3,000 எரிவாயு அடுப்புகள் உட்பட பல்வேறு பொருட்களை சந்தைக்கு வெளியிடத் தயாராக இருந்த ஒரு நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது .
சம்பந்தப்பட்ட பொருட்கள், பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, நாட்டிலேயே பொருத்தப்பட்டதாகவும், இதற்குத் தேவையான ஏனைய பல பாகங்கள் நாட்டில் உள்ள பல்வேறு நபர்களிடமிருந்து வாங்கப்பட்டதாகவும் ,நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளிடம் கூறப்பட்ட போதிலும், அதற்கான எந்த ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அப்போது சமர்ப்பிக்கத் தவறியுள்ளது .
மேலும் சம்பந்தப்பட்ட எரிவாயு அடுப்புகளுக்கான பொதியிடுதல் மற்றும் தொடர்புடைய ஆவணங்களும் உள்ளூரில் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளமை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு எரிவாயு அடுப்புகளை இறக்குமதி செய்வது இறக்குமதி ஆய்வு நடைமுறைக்கு உட்பட்டது.
இலங்கை தர நிர்ணய சபையால் (SLSI) நிர்வகிக்கப்படும் கட்டாய இறக்குமதி ஆய்வு திட்டத்தின் (CIIS) ஒரு பகுதியாக இறக்குமதி செய்யப்படும் எரிவாயு அடுப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை உறுதி செய்வது கட்டாய நடைமுறையாக உள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவனமும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் எரிவாயு அடுப்புக்களின் தரத்தை மதிப்பிடுகிறது,
மேலும் தொடர்புடைய பொருட்கள் சந்தைக்கு வெளியிடப்படுவதற்கு முன்பு அத்தகைய இணக்க சான்றிதழ்கள் அல்லது சோதனைகள் கட்டாயமாகும்.
இவ்வாறான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் குறித்த விற்பனை நிறுவனம் தவிர்த்துள்ளதாகவும் அவை சரியான தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யாமல் சந்தைக்கு பொருட்களை வெளியிடுவதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்த நடவைடிக்கை எடுக்கப்பட்டதோடு வர்த்தக நிலையத்தை சீல் வைக்கவும் விசாரணைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

