
கோட்டை – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்
புத்தளம் ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் பாதையின் திருத்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் நிலவிய கடும் மழை காரணமாக, குடாவெவ மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள கடுபிட்டி ஓயா பாலத்திற்கு அருகிலான ரயில் பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது.
இதன் விளைவாக, கொழும்பு கோட்டை – சிலாபம் – புத்தளம் இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அத்துடன், சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து ரயில் தொகுதிகள் (Train Sets) போக்குவரத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதுடன், அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாத்தாண்டியா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையே இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலக ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


