
நவகமுவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நேற்று (1) இரவு 10 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவத்தில் 20 வயதுடைய, பொரளை பகுதியைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த இருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வாடகைக்கு பெறப்பட்டிருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் அம்பலாந்தோட்டை பகுதியையும், மற்றொருவர் தெமட்டகொடை பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் ஒருவரின் உடலில் நான்கு துப்பாக்கி ரவைகளும், மற்றொருவரின் உடலில் ஒரு ரவையும் பாய்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், இது இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையிலான முன்விரோதத்தின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

