
இந்தோனேசியாவில் உலகின் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு
உலகின் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவின் முனா தீவில், கடற்கரை அருகே அமைந்துள்ள ஒரு சுண்ணாம்புக் குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் போது, குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட சிவப்பு நிற கை ஓவியம் ஒன்று கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.
அந்தக் குகைச் சுவரில் கை அச்சுகளுடன், பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட மனித உருவங்களும் வரையப்பட்டுள்ளன. குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மீது நிறமிகளை ஊற்றி இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சில ஓவியங்களில் விரல் நுனிகள் கூர்மையாகத் தோன்றும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானிகளின் மதிப்பீட்டின்படி, இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது. இது ஸ்பெயினில் கண்டறியப்பட்ட 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால் கை அச்சை விட சற்றே பழமையானதாகும்.
இதற்கு முன்பு, தென் ஆப்பிரிக்காவில் 73,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் கற்களில் செதுக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அவை ஓவியங்களாக அல்லாமல் செதுக்கல்களாக இருந்தன என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

