நாளைமுதல் தீவிரமாகும் அரச வைத்தியர்களின் வேலை நிறுத்தம்                    164 அலகுகளின் செயற்பாடுகள் முடங்கும் அபாயம்

நாளைமுதல் தீவிரமாகும் அரச வைத்தியர்களின் வேலை நிறுத்தம் 164 அலகுகளின் செயற்பாடுகள் முடங்கும் அபாயம்

தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை முதல் வேலை நிறுத்ததம் முன்பை விட தீவிரமாகும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள ஐந்து வகையான தொழிற்சங்க நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நாளை காலை 08.00 மணி முதல், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்கள் (Specialist Doctors), தாம் மேலதிகமாக வழங்கி வந்த ஏனைய வைத்தியசாலைகளுக்கான ‘பதிலீட்டு கடமைகளில்’ (Covering duties) இருந்து விலகவுள்ளனர்.

இதன் காரணமாக, அந்தந்த விசேட வைத்திய நிபுணர்கள் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் மட்டுமே பணியாற்றுவார்கள்.

இதனால் நாடு முழுவதும் உள்ள 164 அலகுகளின் (Units) செயற்பாடுகள் ஸ்தம்பிதமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையினால் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் கடுமையாகப் பாதிப்படையும் என வைத்தியர் சுகததாச எச்சரித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் இவ்வளவு பாரதூரமான நிலைமை நிலவும் போதிலும், சுகாதார அமைச்சர் மேற்கொண்டு வரும் அடிப்படையற்ற அறிக்கைகள் குறித்து வருத்தமடைவதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் பணியாற்றுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் வைத்தியசாலைக் கட்டமைப்பில் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்:

மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு,சிகிச்சைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை,தேவையான மனிதவளப் (ஊழியர்) பற்றாக்குறை போன்ற நிலைமைகளால் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவ்வாறு பாதிக்கப்படும் மக்கள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையிலான அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்றும் சுகததாச குற்றம் சாட்டினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )