
புதருக்குள் பதுங்கியிருந்து ட்ரம்ப்பைக் கொல்லச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரையன் ரௌத்திற்கு ஆயுள் தண்டனை
2024 காம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, டொனால்ட் ட்ரம்ப்பைக் கொல்லச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரையன் ரௌத்திற்கு (Ryan Routh) அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
2024 செப்டம்பர் 15ஆம் திகதி புளோரிடாவில் ட்ரம்ப் விளையாடிக்கொண்டிருந்த கோல்ஃப் மைதானத்தின் புதர்களுக்குள், அரை தானியங்கி துப்பாக்கியுடன் (Semi-automatic rifle) சுமார் 10 மணிநேரம் ரௌத் பதுங்கியிருந்துள்ளார்.
அங்கிருந்த இரகசிய சேவை முகவர்களால் அவர் அடையாளம் காணப்பட்டார்.
பென்சில்வேனியா கூட்டத்தில் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் முயற்சிக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி நேற்று தீர்ப்பை வழங்கினார்.
“ஒரு மனித உயிரைப் பறிப்பதற்காக நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, சதியில் ஈடுபட்டது தெளிவாகத் தெரிகிறது” என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
59 வயதான ரௌத், தனது வழக்கைத் தானே வாதிட்டார்.
அவர் தனக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு கோரினார்.
மேலும், தான் ட்ரம்ப்பைக் கொல்லும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்றும், சிறையில் உளவியல் சிகிச்சைக்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இவ்வாறான குற்றங்கள் “அமெரிக்க ஜனநாயகத்தைப் புரட்டிப்போடும் நோக்கம் கொண்டவை” எனக் கூறி, ஆயுள் தண்டனையைப் பரிந்துரைக்கப்பட்டது.
சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே புளோரிடா வந்த ரௌத், ட்ரம்ப்பின் நடமாட்டங்கள் மற்றும் கால அட்டவணையைத் திரட்ட முயன்றதாக அரசுத் தரப்பு தெரிவித்தது.
நீதிமன்றத்தில் விலங்கிடப்பட்ட நிலையில் உரையாற்றிய ரௌத், வெளிநாட்டு மோதல்கள் குறித்துப் பேசியதுடன், தன்னை வெளிநாட்டு அரசியல் கைதிகளுக்குப் பதிலாகப் பரிமாற்றம் செய்யுமாறும் கோரிக்கைகளை முன்வைத்தார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரையன் ரௌத் அமெரிக்காவின் வட கரோலினாவில் வசித்து ,பின்னர் ஹவாய் மாகாணத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் ஒரு கூரை அமைப்பாளர் மற்றும் கட்டுமானப் பணியாளராகப் பணியாற்றி வந்தவர் எனவும் யுக்ரைன் போரில் சர்வதேச தன்னார்வலர்களைத் திரட்டும் நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டியவர் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன .

