
சட்டத்தரணி கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கார் காலியில் எரிந்த நிலையில் மீட்பு
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவ ஆராச்சி மற்றும்
அவரது மனைவியை கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ,கார் கைப்பற்றப்பட்டபோது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொலையை வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “கரந்தெனிய சுத்தா” எனப்படும் ஜயலத் சில்வா என்பவர் வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளுக்காக ஆஜராகி வந்ததாகவும், பின்னர் அவரது எதிரியான “லோகு பெட்டி” எனப்படும் குற்றவாளியின் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, கரந்தெனிய சுத்தா தொடர்பான தகவல்களை லோகு பெட்டிக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுத்தாவின் தரப்பினரால் இந்த கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

