
சாம்பல் புதனுடன் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்கம்
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் இன்று (18) சாம்பல் புதன்கிழமை அனுசரிப்புடன் தொடங்குகிறது.
இதையொட்டி, தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலியும் ஆராதனையும் நடைபெறுகின்றன.
விசுவாசிகள் நெற்றியில் சாம்பல் பூசிக் கொண்டு மனந்திரும்பலும் தவவாழ்க்கையும் மேற்கொள்ள உறுதிமொழி எடுக்கின்றனர்.
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள்-இல், யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த உயிர்த்தெழுந்த நாளை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
ஈஸ்டர் பெருவிழாவிற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாகக் கடைபிடிக்கப்படுகின்றன. அதன் முதல் நாளே சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில், விசுவாசிகள் மீன், இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளைத் தவிர்க்கின்றனர்.
மேலும், வீடுகளில் திருமணம், பிறந்தநாள், புதுமனை புகுவிழா போன்ற கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை.
அத்துடன், ஏழைகளுக்கு உணவு வழங்குதல், துன்பப்படும் மக்களுக்கு பொருள் மற்றும் பணியுதவி செய்தல், அவர்களுக்கு ஆறுதல் அளித்தல் போன்ற நற்செயல்களிலும் கிறிஸ்தவர்கள் ஈடுபடுவது வழக்கமாகும்.

