ஏர் இந்தியா விமான சேவைகளைக் குறைக்கத் திட்டம் ; விமான சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா ?

ஏர் இந்தியா விமான சேவைகளைக் குறைக்கத் திட்டம் ; விமான சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா ?

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், 2026 நிதியாண்டில் சுமார் ரூ. 20,000 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனது விமானச் சேவைகளைக் கணிசமாகக் குறைக்க ஆலோசித்து வருவதாக பிசினஸ்லைன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா தனது விமான அட்டவணையில் 15-20% குறைப்பை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது.

ஒட்டுமொத்த ஏர் இந்தியா குழும அளவில் இந்த குறைப்பு 10-15% வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஏர் இந்தியா குழுமம் தினமும் இயக்கும் சுமார் 1,100 விமான சேவைகளில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படலாம்.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் நீண்ட நேரப் பயணக் கட்டணங்கள் காரணமாக, குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நீண்ட தூர சர்வதேச வழித்தடங்களில் அதிகப்படியான குறைப்புகள் இருக்கும் எனத் தெரிகிறது.

விமான எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் 2026 நிதியாண்டில் ஏற்பட்டுள்ள சுமார் 20,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர் ஊதியம் மற்றும் விமானப் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளமையால் லாபத்தன்மை குறைந்துள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

இது ஒரு பின்னடைவு அல்ல, மாறாக செலவுகளைக் குறைத்து லாபத்தை ஈட்டுவதற்கான ஒரு வலையமைப்பு மேம்படுத்ததும் முயற்சி என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த அதிரடி குறைப்பு நடவடிக்கை காரணமாக, வரவிருக்கும் விடுமுறைக் காலங்களில் விமானங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், இதனால் விமானக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் துறைசார் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்த இறுதி முடிவு மே மாதம் நடைபெறவுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் சபைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஏர் இந்தியா இது குறித்து அதிகாரப்பூர்வமான கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )