தையிட்டியில் நிலஅளவீட்டு பணியில் பதற்றம் ; காணி உரிமையாளர்கள் – பொலிஸார் இடையே முரண்பாடு

தையிட்டியில் நிலஅளவீட்டு பணியில் பதற்றம் ; காணி உரிமையாளர்கள் – பொலிஸார் இடையே முரண்பாடு

யாழ்ப்பாணம், தையிட்டி – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ளதாக கூறப்படும் விகாரை அமைந்துள்ள பகுதியில் இன்று (28 இடம்பெற்ற நிலஅளவீட்டு பணிகளின் போது காணி உரிமையாளர்கள் மற்றும் பலாலி பொலிஸார் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

மாவட்ட செயலரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், விகாரை அமைந்துள்ள பகுதியில் காணி உறுதிகள் வைத்துள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்று காலை அவர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.

இதற்காக மாவட்ட செயலர் கடிதம் மூலம் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், சம்பவ இடத்திற்கு சென்ற காணி உரிமையாளர்கள் விகாரைக்கு அருகில் பொலிஸாரால் வீதி தடையிடப்பட்டு, அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு, தனிப்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், காணி உரிமையாளர்களின் பெயர் பட்டியல் ஒன்றை வைத்திருந்த பொலிஸார், அந்த பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறியதால் நிலைமை மேலும் சிக்கலானது.

இதனால் ஆத்திரமடைந்த காணி உரிமையாளர்கள், “காணிகளை அடையாளம் காணவே மாவட்ட செயலரின் அழைப்பின் பேரில் வந்துள்ளோம். ஆனால் பொலிஸ் கட்டுப்பாடுகள் மற்றும் பதிவுகள் காரணமாக எமது காணிகளுக்கே செல்ல முடியவில்லை என்றால் நாம் திரும்பிச் செல்வோம்” என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், தென்னிலங்கையில் இருந்து வந்த சில பிக்குகள் மற்றும் நபர்கள் எந்தவித பதிவுகளும் இன்றி விகாரை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், அதே வாய்ப்பு காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபானந்தராசாவும் அங்கு சென்றிருந்தார்.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலஅளவீட்டு பணிகள், காலை 10 மணி வரை எந்தவிதமாகவும் முன்னெடுக்கப்படாத நிலையில் தாமதமாகிக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்தும் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )