
தையிட்டி விகாரை விவகாரம் ; இனவாதங்களுக்கு இடமளிக்கின்றனர் என இளங்குமரன் குற்றச்சாட்டு
தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை மீட்கிறோம் என சிலர் படங்களை காட்டி இனவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தையிட்டி பகுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சிக்கப்பட்ட போதும், சில காணி உரிமையாளர்களின் நம்பிக்கையின்மையால் குழப்பம் ஏற்பட்டதால் அந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
காணி உரிமையாளர்களிடம் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காணி அளவீட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விகாரை தற்போதைய அரசாங்க காலத்தில் அமைக்கப்படவில்லை எனவும், காணிகளை மீள கையளிப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார். காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பவாணி வீதியை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கிடையில் சிலர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி இனவாதங்களுக்கு இடமளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விகாரை தொடர்பான விடயங்களில் பலாலி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பேணும் பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பிரதீபன்

