
தயிர் வடை சாப்பிட்ட 58 பேருக்கு உடல் நலம் பாதிப்பு
ஒடிசா மாநிலத்தின் படாபூர் கிராமத்தில் தயிர் வடை சாப்பிட்டதில் உணவு விஷவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் 27 குழந்தைகள் உட்பட 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் வியாபாரியொருவர் விற்ற தயிர் வடையை வாங்கி சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் பலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களில் 58 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு பின்னர் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் முகேஷ் மஹாலிங் மற்றும் ஜாஜ்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலையை பற்றி விசாரித்தனர்.
சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மாநில அரசு மூன்று தனிப்பட்ட குழுக்களை அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

