
புத்தாண்டுக்குப் பிறகு இன்று முதன்முறையாகப் பாராளுமன்றம் கூடுகிறது
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு முதன்முறையாகப் பாராளுமன்றம் இன்று (05) கூடுகிறது.
சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று காலை 09.30ற்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாகப் பாராளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 8ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 4 ஒழுங்குமுறைகள் இன்று அங்கீகரிக்கப்பட உள்ளன.
மீட்பு, புனர்வாழ்வு மற்றும் உடைமைச் சேத சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் நாளை நடைபெறவுள்ளது, அதே வேளையில் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகளும் மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகளும் நாளை மறுநாள் அங்கீகரிக்கப்படவுள்ளதாகப் பாராளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.
பல தனிநபர் தீர்மானங்கள் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படவுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், இந்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, எதிர்க்கட்சி பாராளுமன்றக் குழு நேற்று (04) பிற்பகல் கூடியது.
“இந்த பாராளுமன்ற வாரத்தில் திறைசேரியிலிருந்து நிதி திருட்டுப் பிரச்சினை மீது அதிக கவனம் செலுத்த அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது,” என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்

