
ஜனாதிபதி நிதியம் – Janashakthi Foundation இணைந்து நாட்டின் சிறுவர்களுக்கு சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதற்காக வேலைத்திட்டம்
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், இன்று (06) முற்பகல் ஜனாதிபதி நிதியம் மற்றும் Janashakthi Foundation இணைந்து விசேட ஒத்துழைப்பு செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன.
சிறுவர்களின் சுகாதார வசதிகள் தொடர்பான நிதித் தடைகளைக் குறைக்கும் நோக்கில், ஜனாதிபதி நிதியம் மற்றும் Janashakthi Foundation இன் பங்களிப்புடன் தேசிய நலன்புரித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம், ‘நாளை வெல்லும் உலகுக்காக இன்று நலம் காப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பொதுவாக ஜனாதிபதி நிதியத்தின் கீழ் ஒரு நோயாளியின் சிகிச்சைக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படுவதுடன், இந்த புதிய இணக்கப்பாட்டின் கீழ், Janashakthi Foundation இனால் அதே அளவிலான தொகை அல்லது சிகிச்சைக்குத் தேவையான எஞ்சிய தொகை ஆகிய இரண்டில் எது குறைவானதோ அந்தத் தொகை வழங்கப்படும்.
ஜனாதிபதி நிதியத்தை உண்மையிலேயே மக்களுக்கான ஒரு நிதியமாக மாற்றி, அதன் செயல்பாடுகளை பரவலாக்கவும், டிஜிட்டல் மயப்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே தெரிவித்தார். இதன் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுவதாகவும், Janashakthi Foundation உடன் ஏற்படுத்திக்கொண்ட இந்த ஒத்துழைப்புச் செயற்பாாடு இதனை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தனியார் துறையுடன் இணைந்து, முறையான ஒருங்கிணைப்புடன் அர்த்தமுள்ள வகையில் செயற்படுவதன் மூலம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சுகாதார உதவிகளை மேம்படுத்தவும், அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளும்போது நிதி உதவிக்கும் உண்மையான செலவுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் முடியும் என ரோஷன் கமகே மேலும் தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம் என்பது குழந்தைகள் சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் பயணத்தைத் தடுக்கும் மிகப்பெரிய தடையாகும் என இங்கு கருத்துத் தெரிவித்த ஜனசக்தி குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ரமேஷ் ஷாஃப்டர் குறிப்பிட்டார்.
இந்த ஒத்துழைப்பின் மூலம் அந்தத் தடையைக் குறைத்து, உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு அந்த உதவியை வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் எதிர்காலச் சந்ததியினர் மிகுந்த நம்பிக்கையுடன் நாளைய தினத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான அடித்தளத்தை அமைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிக நிதி உதவியை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரிகள், ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பிக்கும்போது தமது தகவல்களைப் பாதுகாப்பான முறையில் Janashakthi Foundation இற்கு வழங்குவதற்கான அனுமதிப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
நிதியுதவி தேவைப்படும் பிள்ளைகளைக் கண்டறிதல், அவர்களின் தகவல்களை உறுதிப்படுத்துதல் மற்றும் நிதி அனுமதிகளை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து ஜனாதிபதி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும்.
இந்த வேலைத் திட்டத்தின் கீழ், பொதுவாகச் சிகிச்சை முடிந்த பின்னர் அதற்குரிய தொகை சிறுவர்களின் பாதுகாவலர்களுக்கு வழங்கப்படுவதோடு, அவசர சிகிச்சைகள் மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்காக, அந்தச் சிகிச்சைகளுக்கு முன்னரே பணம் வழங்கப்படும்.
2026 மே மாதம் 15ஆம் திகதி முதல் ஜனாதிபதி நிதியத்திற்கு சமர்ப்பிக்கப்படும் மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்காக, Janashakthi Foundation இடமிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரிகள் தகுதி பெறுவார்கள்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்ட பணிப்பாளர் நாயகமும் ஜனாதிபதி ஆலோசகருமான (சட்ட விவகாரங்கள்) ஜே.எம். விஜேபண்டார, ஜனசக்தி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சி.டி.ஏ. ஷாஃப்டர், குழுமத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி காமிக டி சில்வா, ஜனசக்தி குழுமத்தின் பிரதி பிரதான நிறைவேற்று அதிகாரி டில்ஷான் வீரசேகர ஆகியோருடன் ஜனாதிபதி நிதியம் மற்றும் Janashakthi Foundation இன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026.05.06

