மக்களுக்கு அரச பொதுச் சேவைகளை வினைத்திறனாக வழங்கும் ‘PIC-Net’ படையணி

மக்களுக்கு அரச பொதுச் சேவைகளை வினைத்திறனாக வழங்கும் ‘PIC-Net’ படையணி

அரச பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன் மிக்கதாக்க ‘PIC-Net’ படையணி ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுத் தாக்கச் சம்பியன்களின் வலையமைப்பு (Public Impact Champions Network – PIC-Net) என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன மட்டத்தில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரச துறையின் வினைத்திறனை அதிகரித்து, பொதுமக்களுக்கு உயர்தர சேவையை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,
இது தொடர்பான சுற்றுநிருபத்தை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரச நிறுவனமும் நான்கு பேர் கொண்ட சம்பியன்கள் குழுவை நியமிக்க வேண்டும்.

தொழில்நுட்பப் பயன்பாடு, சேவை அனுபவம், செயல்முறை வினைத்திறன் மற்றும் நிறுவன மாற்றங்களை ஒருங்கிணைக்க இந்தக் குழு பொறுப்பேற்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 400 டிஜிட்டல் மாற்றச் சம்பியன்களைக் கொண்ட ஒரு தேசியக் குழு உருவாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு டிஜிட்டல் மாற்றம், சேவை மறுசீரமைப்பு மற்றும் மாற்றங்களை நிர்வகித்தல் போன்ற விடயங்களில் முறையான பயிற்சிகள் மற்றும் நிபுணர் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் ‘GovTech Sri Lanka’ ஆகியன இணைந்து வழிகாட்டல்களை வழங்கும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) உதவியுடன் இந்தத் திட்டத்திற்கான மேலாண்மை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகள் தமது நிறுவனங்களுக்குள் டிஜிட்டல் மாற்றத்திற்கான மையப்புள்ளிகளாகச் செயற்பட்டு, அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அரச சேவையை நவீனமயப்படுத்த பங்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )