
முப்பது ஆண்டுகால யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – நாளை ஜனாதிபதி தலைமையில் தேசிய வெற்றிக் கொண்டாட்டம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் நிலவி வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 17ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 மே 18 அன்று நந்திக்கடல் பகுதியில் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் மூலம் யுத்தம் முடிவுக்கு வந்தது.
1975 ஜூலை 27 ஆம் திகதி அப்போதைய யாழ்ப்பாண மேயர் ஆல்ஃபிரட் துரயப்பா படுகொலை செய்யப்பட்டார்.
இது நாட்டில் விடுதலைப் புலிகள் தனி நாடு கோருவதற்கான முதல் படியாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்தினர்.
இலங்கை மத்திய வங்கி மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களும் தாக்கப்பட்டன.
அத்துடன் ஜெய ஸ்ரீ மகாபோதி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகிய பௌத்த மதத் தலங்களும் தாக்கப்பட்டன.
கிழக்கு விவசாயிகளின் பயிர்களுக்கு நீர் கொண்டு வந்த முக்கிய நீர்வழியான மாவில் ஆறு மதகு மூடப்பட்டன.
பல்வேறு கட்டங்களில் இராணுவத்தினரால் பதில் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த யுத்தத்தினால் வடக்கு கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் வடக்கு கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்
பலர் காணாமல் போயுள்ள நிலையில் இன்று வரை காணாமல் போனவர்களுகாக நீதி வேண்டி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன .
2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதன் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
போர் வெற்றியின் 17வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் “தேசிய வெற்றிக் கொண்டாட்டம்” நாளை நடைபெற உள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவிடத்தின் முன்பாக இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் என்று ரணவிரு சேவா அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி. கோஹோனா : முதன்முறையாக, இந்த முறை வடக்கு மற்றும் கிழக்கில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் உறவினர்களும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று கூறினார்.

