
நடுவானில் மோதிய போர் விமானங்கள்
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின் போது, இரண்டு அதிநவீன ராணுவ ஜெட் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடாஹோவில் உள்ள ‘மவுண்டன் ஹோம்’ விமானப்படை தளத்திற்கு அருகில் நடைபெற்ற ‘கன்ஃபைட்டர் ஸ்கைஸ் ஏர் ஷோ’ என்ற இரண்டு நாள் விமானக் கண்காட்சியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு E/A-18G க்ரௌலர் ரக மின்னணு போர் விமானங்கள் வானில் சாகச பறப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த உடனேயே, விமானங்களில் இருந்த நான்கு விமானிகளும் ‘எஜெக்ஷன்’ தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட் உதவியுடன் தரையிறங்கியுள்ளனர்.
இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தையடுத்து ‘மவுண்டன் ஹோம்’ விமானப்படை தளம் முழுமையாக மூடப்பட்டு, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் அமீலியா உமயம், விபத்துக்குள்ளான விமானங்கள் வாஷிங்டனின் விட்பே தீவில் உள்ள 129வது எலக்ட்ரானிக் அட்டாக் ஸ்குவாட்ரனைச் சேர்ந்தவை என தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்திற்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட முதல் விமானக் கண்காட்சி இதுவாகும்.
இதற்கு முன்னர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விமானக் கண்காட்சியின் போதும் ‘ஹேங் கிளைடர்’ விமானி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

