
வரதட்சணை கொடுமையால் இளம் மணப்பெண் உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணொருவர், வரதட்சணை தொந்தரவால் மன உளைச்சலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் ஜெயச்சந்திரன் ஜென்ஸி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தாரின் தகவலின்படி, குறித்த இளம்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இளைஞரை நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டிருந்தார்.
எனினும், திருமணத்திற்குப் பின்னர் கணவரின் தாயார் அவரை ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, 25 பவுன் தங்க நகை மற்றும் வீடு ஆகியவற்றை வரதட்சணையாக வழங்குமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியில் நலிவுற்ற நிலையில் இருந்ததால் அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும், தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடும்பத்தினரிடம், கணவரை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என குறித்த பெண் கோரியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதற்கு பதிலளித்த கணவர், “வரதட்சணை வழங்கப்பட்டால் மட்டுமே வெளிநாட்டுப் பயணம் நடைபெறும்” என தெரிவித்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையால் கடும் மன உளைச்சலுக்குள்ளான இளம்பெண், நேற்று காலை துயரமான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

