
முன்னாள் கியூபா தலைவர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா கொலை குற்றச்சாட்டு
கியூபாவின் முன்னாள் ஆயுதப்படைகளின் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது அமெரிக்க பிரஜைகளை கொலை செய்ய சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு முன்வைத்துள்ளது.
1996ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையிலான கடற்பரப்பில், “Brothers to the Rescue” எனும் கியூபா-அமெரிக்க அமைப்பிற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் நடைபெற்ற காலத்தில் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) கியூபா ஆயுதப்படைகளின் தலைவராக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் கியூபா மீது அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய கியூபா ஜனாதிபதி Miguel Díaz-Canel இந்த குற்றச்சாட்டுகளை “சட்ட அடிப்படை அற்ற அரசியல் நாடகம்” என விமர்சித்துள்ளார்.
மியாமியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அமெரிக்க செயற்பாட்டு சட்ட மா அதிபர் டாட் பிளான்ச் (Todd Blanche), விமான அழிப்பு மற்றும் நான்கு கொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும், ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தன்னார்வமாகவோ அல்லது வேறு வழியிலோ அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கியூபா அரசு அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்துள்ளது.

