சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அநுரவுக்கு அளிக்கும் வாக்குகளாகும் !
இன்று நான் நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார ஸ்திரத்தன்மையின் காரணமாகவே அன்று பொருளாதார சவாலுக்கு பயந்து ஓடிய சஜித்தும் அநுரவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் சஜித்தால் வெற்றிபெற முடியாது எனவும், சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அநுரவிற்கு வழங்கப்படும் வாக்களாகும் என ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை காட்டிக்கொடுக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.
கெக்கிராவ பொது விளையாட்டரங்கில் நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
வீடு இடிந்து வீழ்ந்தால் பலமான அடித்தளத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னைய அஸ்திவாரத்தை வைத்து அதனைக் நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இனங்கண்டு கொள்வதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்த வீட்டை நிர்மாணிக்கவே இம்முறை மக்கள் ஆணையைக் கோருவதாகவும் தெரிவித்தார்.
இருக்கும் வீட்டினையும் எரிப்பதற்கே சஜித் மற்றும் அநுர வாக்குகளைக் கோருவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தான் பெறும் வெற்றி நாட்டின் வெற்றியாக அமையும் எனவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”நாட்டில் 2022 இல் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் வரிசைகள் நீண்டு கிடந்தன. பிரச்சினைகள் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்தன. அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலகினார். எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை ஏற்பது மட்டுமே மாற்று வழியாக இருந்தது. அன்றிரவு வரை அவரிடமிருந்து தகவல் வரவில்லை. பின்னர் சஜித் ஏற்க மறுப்பதாக தகவல் கிடைத்து. பின்னர் சரத் பொன்சேகாவும் நாட்டை ஏற்கவில்லை என்று தகவல் வந்தது.
சகலரும் இவ்வாறு கைவிட்டால் நாடு கடுமையான நெருக்கடிக்குள் விழுந்துவிடும் என்பதை நான் அறிந்துகொண்டேன். அதனால் எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு ஆதரவாக கைத்தட்டக்கூட ஒரு எம்.பியும் அருகில் இருக்கவில்லை.
பின்னர் இப்போது என்னுடன் இருக்கின்ற எம்.பிக்கள் அனைவரும் எனக்கு உதவ முன்வந்தனர். அன்று நாம் ஒன்றுபட்டிருக்காவிட்டால் பிள்ளைகளுக்கு பால்மா இருந்திருக்காது. ஜூலை 09 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டுச் சென்று பதவி விலகினார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்வது குறித்து பேசினோம். அப்போது என்னை பதவி விலகுமாறு வலியுறுத்திய அனுரகுமார, சஜித்திடம் நாட்டை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டேன். அவர்கள் ஏற்க மாட்டோம் என்று மறுத்திவிட்டனர். சபாநாயகர் நாட்டை நிர்வகிக்கட்டும் என்றனர். பாராளுமன்றத்தை நிர்வகிப்பதே தனது பொறுப்பு என்றும் அதனை விடுத்து நாட்டையும் பொறுப்பேற்ற முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
அந்த தருணத்தில் பாராளுமன்றத்தை முற்றுகையிட ஒரு குழு வந்தது. இராணுவத் தளபதிக்கு அறிவித்து அவர்களை தடுக்குமாறு உத்தரவிட்டேன். அவ்வாறு செய்திருக்காவிட்டால் இலங்கை அன்றே பங்களாதேஷின் நிலையைப் பார்த்திருக்கும். பின்னர் ஒற்றுமையாக ஆட்சி அமைக்கலாமென அனுரவிற்கும் சஜித்துக்கும் அழைப்பு விடுத்ததேன். அதனையும் மறுத்தனர். மறுமுனையில் எனக்கு ரணில் ராஜபக்ஷ என்று முத்திரை குத்தினார்கள். இன்று ராஜபக்ஷர்கள் என்னுடன் இல்லை என்பது தெரிந்த பின்னர் என்னோடு இணைந்துகொள்ளாததை நினைத்து வருந்துகின்றனர்.
நாட்டு மக்களின் வாழ்க்கை சுமையை இறக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நான் பொருட்களின் விலையை குறைத்தேன். கடன் வழங்கிய தரப்பினருடன் இணக்கப்பாடுகளை எட்டினோம். மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். சம்பள அதிகரிப்பு வழங்கினோம். ‘அஸ்வெசும’, ‘உறுமய’ உள்ளிட்ட நலன்புரித் திட்டங்களுடன் அங்கவீனமானர்களுக்கான கொடுப்பனவும் வழங்கினோம். வங்குரோத்து நாட்டில் இவற்றைச் செய்தோம். சமூர்த்தி ஊழியர்களையும் பாதுகாத்தோம். உரத் தட்டுப்பாட்டை நீக்கினோம். தோட்டங்களை கிராமங்களாக்க திட்டமிட்டிருக்கிறோம். கொழும்பில் மாடிக்குடியிருப்பில் வசிப்போருக்கு வீட்டுரிமை வழங்கினோம்.
நாட்டில் நிலைத்தன்மை உருவாக்கப்பட்டதால் இன்று தேர்தல் நடத்த முடிகிறது. பங்களாதேஷில் இன்று தேர்தல் நடத்த முடியாத நிலைமை வந்துள்ளது. அன்று நான் நாட்டை நிலைப்படுத்தும் முயற்சிகளை எடுத்ததாலேயே அனுரவும் சஜித்தும் சுதந்திரமாக தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதனால் அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். இது தான் ரணில் ஆட்சி என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்பதே எனது தேவையாக இருந்தது. ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தவே நாட்டின் அதிகாரத்தை மீண்டும் தருமாறு மக்களிடம் கோருகிறேன். வீடு உடைந்தால் அதனை திருத்தியமைப்பது போல நாட்டைக் கட்டியெழுப்பவே நான் மக்கள் ஆணையை கேட்கிறேன். அனுரவும் சஜித்தும் வீட்டின் எஞ்சிய பகுதிகளுக்கும் தீவைக்க பார்க்கின்றனர்.
வாழ்க்கைச் சுமையைக் குறைத்து, தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைத்து நாட்டில் சுமூகமான நிலைமையை உருவாக்க எதிர்பார்க்கிறோம். ரூபாவின் பெறுமதியைப் பலப்படு்த்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கிறோம். ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்த நாட்டில் மொத்த தேசிய உற்பத்தியை பலப்படுத்தினோம்.
சஜித்தும் அனுரவும் வரியைக் குறைத்து நாட்டின் வருமானத்தை குறைக்க பார்க்கிறார்கள். அதே தவறை தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் செய்தார். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினர் நம்மை கைவிட்டால் மீண்டும் நெருக்கடிக்குள் விழும்.
அதனால் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதே எமது நோக்கமாக உள்ளது. சுய தொழில் பயிற்சி பெற 50 ஆயிரம் இளையோருக்கு நிதி நிவாரணம் வழங்குவோம். அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் தொழில் வழங்குவோம். மேலும் 50 ஆயிரம் பேருக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெறவும் நிதி நிவாரணம் வழங்குவோம். அவர்கள் பயிற்சி பெற்று வௌிநாடு செல்ல முடியும்.
விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக தொழில் வாய்ப்புக்களை வழங்குவோம். சுற்றுலாத் துறையை இரட்டிப்பாக மேம்படுத்துவோம். சீகிரியாவை போலவே அனுராதபுரத்தை அபிவிருத்தி செய்வோம். திருகோணமலை வலுசக்தி மத்தியஸ்தானமாக மாற்றியமைக்கப்படும்.
அதேபோல் வறிய மக்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே உறுமயவின் கீழ் காணி உறுதிகளை வழங்குகிறோம். அதனுடன் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் இணையவும் வாய்ப்பளிப்போம்.
சஜித் கட்டிய வீடுகளுக்கும் நான் நிவாரணம் வழங்குவேன். அனுரகுமாரவினால் இதனை செய்ய முடியுமா? அவர்களிடம் கொடுத்தால் நாட்டை குழப்பிவிடுவர். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியை நானே பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்பதை கட்சியின் ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சஜித் தேர்தலில் வெல்லப்போவதில்லை. அதனால் சஜித்துக்கு வழங்கும் வாக்குகள்அனுரவுக்கு வழங்கும் வாக்குளாகவே இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அனுரவிற்கு உதவுவது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை இல்லை என்பதையும் ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, செப்டம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர்கள் வெடித்து பங்களாதேஷ் போன்றதொரு நாடு உருவாகும்.”என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்:
“இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை எளிதாக மறந்துவிட முடியாது. 15 மணி நேர மின் தடையை மறந்துவிட முடியாது. எம்மை மீட்கப்போகின்றவர் யார் என்று தேடினோம். பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் பதவிகள் வெற்றிடமாக இருந்தன. அப்போது நாட்டை ஏற்று பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே முன்வந்தார்.
அதற்காக அர்பணிப்புக்களை அவர் செய்தபோது, அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கைகளில் இருந்தது. ஜனாதிபதியின் வீடு தீயில் எரிந்தது. அதனால் பாராளுமன்றத்தில் 115 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம்.
ஜனாதிபதி நாட்டைக் கட்டியெழுப்பிய வேளையிலும் பலர் அதற்கு பல விதமாக தடைப் போட முற்பட்டனர். இன்றும் அளவையியல் திணைக்கள அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். மக்களுக்கு காணி உறுதிகள் கிடைப்பதை விரும்பாமலேயே அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக ஜே.வீ.பீ. தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதனால் அரசியல் நோக்கங்களை விடுத்து சேவை மனப்பாங்குடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றுங்கள். ஒரு முறை பரீட்சார்த்தமாக பதவியில் அமர்த்துமாறு சிலர் கோருகின்றனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்த சேவைகளை மக்கள் மறக்கபோவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார்.
இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க:
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி மட்டுமே நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடுமையான பொருளாதார நெருக்கடி வந்தது. அந்த நெருக்கடிகளுக்கு 2 வருடங்களில் முற்றுப்புள்ளி வைக்க அவரால் முடிந்தது. மற்றைய தலைவர்கள் தேர்தல் பற்றி சிந்திக்கையில் ஜனாதிபதி ரணில் மட்டுமே நாட்டு மக்களை பற்றி சிந்தித்தார்.
விவசாயத்தை பலப்படுத்தியே ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினார். அதனால் இன்று விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. அதனால் விவசாயிகளுக்கும் அரச ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க முடிந்தது. இதன்போது ஜே.வீ.பி. வேலை நிறுத்தங்களை செய்து நெருக்கடிகளை ஏற்படுத்த முனைந்தது. ஆனால், அடுத்த வருடத்திலும் அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீண்டு வரும் வரையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் வழங்கும். ஜே.வீ.பி. இன் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டில் வறிய மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே வழி செய்யும். அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனமும் மக்களை மேலும் கஷ்டத்தில் தள்ளிவிடுவதாகவே அமைந்திருக்கிறது. எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்களை தவிர நாட்டை கட்டியெழுப்ப மாற்றுத் தலைவர்கள் ஒருவரும் இல்லை.” என்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க:
“வீழ்ந்து கிடந்த நாட்டை மீட்ட ஜனாதிபதி என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவால் மட்டுமே எம்மை எதிர்காலத்திலும் பலப்படுத்த முடியும். பொருளாதார சரிவில் நாம் பட்ட கஷ்டங்கள் நினைவிருக்கிறது. இன்று நாடு அனுரவிற்கு என்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று சொல்கிறார்.
மற்றைய வேட்பாளர்களை விடவும் எளிமையான தேர்தல் விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார். அதுவே நாட்டில் முன்மொழியப்பட்டிருக்கும் நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டங்களைக் கொண்ட ஒரே தேர்தல் விஞ்ஞாபனமாகும்.” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன:
“அவசரப்பட்டு பிடித்த மீன்கள் பழுதடைந்துவிடும். அதுபோலதான ஐக்கிய மக்கள் சக்தியும் ஜேவீபீயும் முன்பே தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து இன்று பின்னடைவை சந்தித்துள்ளனர். மக்கள் கூட்டத்தை பஸ்களில் அழைத்து வந்து ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டின் அனைத்து இன மக்களும் வாக்களிப்பர்.
இப்போதும் அனுரவும் சஜித்தும் ஏட்டிக்கு போட்டியாக போலி வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். அவர்களின் வாக்குகள் உண்மையானவை அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் உணவின்றி தவித்த போது 54 எம்.பிக்களுடன் இருந்த சஜித் பிரேமதாசவும் 3 எம்.பிக்களுடன் இருந்த அனுரவும் நாட்டை ஏற்க முன்வரவில்லை. ஆனால் தனியாக வந்து வென்று காட்டும் அதிஷ்டமும் வாய்ப்பும் இயலுமையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே இருந்தது.” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான்:
“இலங்கையில் மாத்திரமின்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழு உலக நாடுகளும் ஏற்றுக்கொண்ட தலைவர். அதனால் இம்முறை சரியான தீர்மானம் எடுக்காவிட்டால் நாட்டு மக்கள் மீண்டும் வீதிகளில் வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைமை வரும். வீதிகளில் உறங்க வேண்டிய நிலைமை வரும்.
இந்தத் தேர்தலில் நாட்டு மக்களினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அமையும். எனவே சவாலுக்கு அஞ்சி ஓடாத தலைவருக்கே வாக்களிக்க வேண்டும். ஓடி மறைந்துகொண்ட தலைவர்களுக்கு வாக்களித்துவிட்டு 6 மாதங்களில் பழைய நிலைமைக்குச் செல்ல முடியாது.
அன்று சஜித்துக்கு நாட்டை ஏற்க வேண்டாம் என்று வாக்களித்த ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா போன்றவர்களே இன்றும் அவரோடு உள்ளனர் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடது.” என்றார்.
வெளிவகார மற்றும் நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி, வடமேல் மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்,முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன், பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க ,எஸ்.எம்.சந்திரசேன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.