சூரிய சக்தியை ஊக்குவிப்பதாக அரசாங்கம் கூறினாலும் இன்று முற்றிலும் மாறுபட்ட விடயம் ஒன்று நடக்கிறது

சூரிய சக்தியை ஊக்குவிப்பதாக அரசாங்கம் கூறினாலும் இன்று முற்றிலும் மாறுபட்ட விடயம் ஒன்று நடக்கிறது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சூரிய சக்தி உற்பத்திக்கு தனி இடம் உண்டு எனவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை எரிசக்தி உற்பத்தியின் காரணமாக நாமும் நாடென்ற வகையில் அதிக கவனம் செலுத்துவதாகவும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் 165 ஆவது பக்கத்தின் படி சூரிய சக்தியின் மூலம் 2000 மெகாவொட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் மேற்கொள்ளும் தீர்மானங்கள் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நாட்டில் உள்ள நிலக்கரி, டீசல் அனல்மின் நிலையங்கள் மற்றும் அதற்குள் அரசுக்குச் சொந்தமற்றவை உள்ளடங்கலாக அவற்றின் உரிமையாளர்கள் பற்றியும் தற்போது டீசல், நிலக்கரி, நீர் மின்சாரம் மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க அரசு செலவிடும் தொகையையும், தனியார் மின் உற்பத்தி நிலையம் மூலம் ஒரு யுனிட் மின்சாரம் கொள்வனவு செய்ய எவ்வளவு செலவாகும் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மின் நிலையங்கள் மூலமாகவும் வெவ்வேறு மின் உற்பத்தி மூலங்களுக்கூடாகவும் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் மெகாவோட் அளவு, இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின் உற்பத்தித் திட்டத்தின்படி சூரிய சக்தி மூலம் எவ்வளவு உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டிருப்பின் அதனை முன்வைக்குமாறும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், இந்நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஒட்டுமொத்த சூரிய மின் சக்தி கொள்ளளவு கூரை மீதும் புவி மீதும் நிர்மாணிக்கபட்டுள்ள மின் கருத்திட்டங்களின் மூலம் வழங்கப்படுகின்ற பங்களிப்பு மற்றும் அதற்காக செலுத்தப்படும் விலைகளை முன்வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

புவி மீது நிர்மாணிக்கப்படும் எவ்வளவு சூரிய மின் கருத்திட்டங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது என்பதையும், அவற்றுள் எந்தளவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் வினவிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், 2025 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி சூரிய சக்தி மின் உற்பத்தி வலையமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் சூரிய மின் உற்பத்தித் திட்டங்களை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் இது மக்கள் நம்பிக்கையை சிதைக்கும் செயல்பாடாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)