
பராட்டே சட்டம் மீண்டும் அமுலுக்கு வரும் நிலையில் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்காக வேண்டி அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டமென்ன ?
நாட்டின் கைத்தொழில் துறையில் கணிசமான பங்களிப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் உட்பட முன்னைய எந்த அரசாங்கங்களும் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை.
இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி விதிப்பால் இந்த தொழிற்துறையினர் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த தொழில் துறைகளும் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
எனவே நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையினரை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பராட்டே சட்டம் மீண்டும் அமுலுக்கு வருவது தொடர்பில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் பாராளுமன்றத்தில் இன்று (08) கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு காணப்படும் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அதிகாரங்களை இடைநிறுத்திய காலம் 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றன.
பராட்டே சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏலம் விடும் அதிகாரங்களை இடைநிறுத்துவதை மேலும் நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா ? என எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
இந்த நுண், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டே பராட்டே சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. அவ்வாறு இருக்கையில், தற்போது அது மீண்டும் அமுலுக்கு வர இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்தத் தொழிற்துறையினர் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதால் தான் இந்த சட்டத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். கடந்த காலத்தில் பராட்டே சட்டம் கைவிடப்பட்டிருந்தாலும் இதனால் வேறு தீர்வுகள் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
ஆகவே இந்த பராட்டே சட்டத்தை இடைநிறுத்தி, இத்தரப்பினருக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
2024 மே 7 ஆம் திகதி அன்று கோப் குழு பரிந்துரைத்ததன் பிரகாரம், பராட்டே சட்டம் மற்றும் அதன் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடத்தை மத்திய வங்கி தயாரித்துள்ளமையினால் அதனை சபையில் சமர்ப்பிக்குமாறும், கடந்த 5 ஆண்டுகளில், நுண், சிறய மற்றும் நடுத்தர வியாபாரிகள், தொழில்முயற்சியாளர்கள் போலவே பாரிய மட்ட தொழில்முயற்சியாளர்களினது எத்தனை சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டன என்பது தொடர்பான விபரங்களை சபையில் முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

