
போர் நிறுத்தம் என்றால் என்ன ?
உலக அமைதிக்கான ஒரு வலுவான ஆயுதமாக போர் நிறுத்தம் (Ceasefire) அடையாளப்படுத்தப்படுகிறது.
ஆயுத மோதலால் ஏற்படும் உயிரிழப்புகளையும் சேதங்களையும் தடுபதற்கான வாசலை திறப்பதால் போர் நிறுத்தம் “தெய்வீக அமைதி” (Truce of God) என சொல்லப்படுகின்றது.
முழுமையாக இல்லாவிட்டாலும், மோதலைத் தற்காலிகமாக நிறுத்தி, பாரிய அளவிலான தீர்வுகளுக்கான வழியைத் காட்டும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக ,குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது நிரந்தரமாக சில ஒப்புதல்களுடன் அல்லது நோக்கங்களுடன் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படுகிறது.
பின்னர் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமாக ஆயுத மோதலை நிறுத்தி சமரசத்தை ஏற்படுத்த முடியுமா என பரிசீலிப்பதற்கான சந்தர்ப்பத்தை போர்நிறுத்தம் வழங்குகின்றது
சூழ்நிலைகளைப் பொறுத்து போர் நிறுத்தம் பல முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
பல சந்தர்ப்பங்களில் போர் வலயத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு, மருந்து, அல்லது பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க போர் நிறுத்தம் அனுமதிப்பதை நாம் அண்மைய காசா இஸ்ரேல் யுத்தத்தில் பார்த்திருக்கிறோம் .
உலக அரசியல் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் போர் நிறுத்த உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்தாலும்
1918 நவம்பர் 11 அன்று இது முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஜெர்மன் அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை போர் நிறுத்தத்திற்கான ஒரு முக்கிய ஆரம்பமாக பார்க்கப்படுகின்றது.
இந்தோ-பாகிஸ்தான் போரை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையின் கீழ் 1949 இல் கராச்சி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது,
வியட்நாம் போரை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் 1973 ஜனவரி 27ஆம் திகதி போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் இணைந்த பாரிஸ் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபட்டது
இவ்வாறு நீண்டு செல்லும் போர்நிறுத்த பட்டியலில் இலங்கை
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பலமுறை போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கதாகும் .
இதன் மூலம் பல ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரில் ஒரு தற்காலிக அமைதி ஏற்பட்டதுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.
இந்த வரிசையில் நேற்றுவரை உக்கிரமடைந்த இஸ்ரேல் -ஈரான் போர் பல உயிரிழப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்திய நிலையில் ,வெளியான போர்நிறுத்த உடன்பாடு என்ற ஆரம்பகட்ட செய்தி குறித்து முரண்பாடான கருத்துக்களும் நிலவுகின்றன , அது நிஜமாக வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது . இந்த போர் நிறுத்தத்தில் ,மத்தியஸ்தம் வகிக்கும் நாடு முக்கிய பங்காற்றுகிறது .
நாடாக இல்லாவிட்டாலும் ,ஐக்கிய நாடுகள் சபை என்ற மிகப்பெரிய உலகளாவிய அமைப்ப்பு மத்தியஸ்ம் வகிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது .
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களில் நோர்வே ஒரு முக்கியமான மத்தியஸ்த நாடாக செயல்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து அதன் நீண்டகால நடுநிலைமை கொள்கையால் சர்வதேச அளவில் மத்தியஸ்த முயற்சிகளுக்கு நம்பகரமான ஒரு தளமாக இருந்து வருகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் நாடுகளுக்கிடையிலான மோதல்களில் பின்லாந்தும் முக்கியப் பங்காற்றுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் பிற பகுதிகளில் பல அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு கத்தார் ஒரு முக்கிய மத்தியஸ்த நாடாக இருந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள் போன்ற பல முக்கிய நிகழ்வுகளில் இதன் பங்கு அளப்பரியது .
துருக்கி அதன் புவியியல் இருப்பிடம் மற்றும் பலதரப்பட்ட இராஜதந்திர உறவுகள் காரணமாக கிழக்கு ஆப்பிரிக்கா முதல் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு வரையிலான நாடுகளில் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா மோதலில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் இதற்கு சிறந்த உதாரணமாகும் .
உலக அரங்கில் செல்வாக்கு அதிகரித்து வருவதால், சீனாவும் பல மோதல்களில் மத்தியஸ்தம் செய்யத் தொடங்கியுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான நல்லுறவை மீட்டெடுப்பதில் சீனாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.
பிராந்திய அமைதியை மேம்படுத்துவதில் ஐக்கிய அரபு அமீரகமும் சமீப காலமாக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆப்பிரிக்க மோதல்களில் தென்னாப்பிரிக்கா ஒரு முக்கிய மத்தியஸ்த நாடாக செயல்படுகிறது. எத்தியோப்பிய மோதலில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அமைப்பு என்ற வகையில், அதன் உறுப்பு நாடுகள் மூலமாகவும், நேரடியாகவும் உலகெங்கிலும் உள்ள மோதல்களின் போது அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகிக்கின்றது .

