
கருப்பு ஜூலை ; இன்றுடன் 42 வருடங்கள்…
இலங்கை வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகக் கருதப்படும் ,தமிழ் மக்கள் மீதான வன்முறையின் மறக்கமுடியாத வடுக்களாக மாறிய கருப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 42 வருடங்களாகிறது.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் கருப்பு ஜூலைக்கான உடனடி காரணமாக அமைந்தது .
1983 ஜூலை 24 ஆம் திகதி இரவு, கண்ணிவெடியில் கொல்லப்பட்ட படையினரின் உடலங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்ட போது பொரளை பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடங்கின .
தொடர்ந்து இலங்கையின் பிற பகுதிகளிலும் தமிழர்களுக்கு எதிராக சிங்களக் வன்முறை குழுக்களால் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன.
இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரச ஆதரவு இருந்ததாகவும், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரும் உதவியாதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன .
1983 ஜூலை 24ஆம் திகதி தொடக்கம் ஜூலை 30 ஆம் திகதி வரை கருப்பு ஜூலையின் கொடூரமான வன்முறை நீடித்தது. இதுவே இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த வன்முறையே தமிழர் போராட்டம் தீவிரமடைவதற்கும் , இலங்கையின் இனப்பிரச்சினை பூதாகாரமாவதற்கு வித்திட்டது எனவும் கூறப்பட்டுள்ளது .
இந்த வன்முறையில் சுமார் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 18,000 வீடுகள் அழிக்கப்பட்டன. 5,000 வணிக நிலையங்கள் அழிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாவும் கூறப்பட்டது. அத்துடன் இலட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.
கறுப்பு ஜூலை வன்முறையின்போது சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன .
1983 ஜூலை 23 ஆம் திகதி இராணுவத்தினரின் உயிரிழப்பு , கறுப்பு ஜூலையின் உடனடி காரணமாக அமைந்த போதும் தமிழ் சிங்கள இனவாதம் இலங்கையில் ஏற்படுவதற்கு பல நீண்ட கால காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன .
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், சிங்கள பெரும்பான்மை அரசு தமிழர்களுக்கு எதிரான பல சட்டங்களை இயற்றியது.
1956 இன் (Sinhala Only Act) என்ற “சிங்களம் மட்டும் சட்டம்” உருவாக்கப்பட்டது.
இது “சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தைக் குறிப்பதாக அமைந்தது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையில் அதுவரை இருந்த பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்களின் , சிங்கள மொழி, ஆட்சி மொழியாக்கப்பட்டது.
இதனால் தமிழர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது.
தமிழர்களுக்கு எதிரான அரசின் கொள்கைகள், பல்கலைக்கழக அனுமதி மறுப்பு, அரசுப் பணிகளில் குறைவான பிரதிநிதித்துவம் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் தமிழர்கள் பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது.
கருப்பு ஜூலைக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் 1981 இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை போன்ற பல்வேறு சம்பவங்கள் இலங்கையர்களிடையே இன பாகுபாடுகள் இடம்பெற வித்திட்ட நீண்டகால காரணங்களாக அமைந்தன .

