மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு

தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்தி, உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து நாடுகளும் பங்களிக்க வேண்டும் என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பிரபல சிங்கள ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய கிழக்கு விவகாரம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய அமைச்சர், யார் போர் நடத்தினாலும் அதனை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

போரின் தாக்கத்தால் ஏராளமான மனித உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“போர் மோதல்களை எவ்விதத்திலும் அங்கீகரிக்க முடியாது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் ஒரு சிறிய நாடு என்ற போதிலும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இத்தகைய போர் மோதல்களை நிறுத்துங்கள். இவ்வாறான மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நிறுத்துங்கள். உலக அமைதியை நிலைநாட்ட பங்களியுங்கள்.

உலக அமைதிக்காக நிறுவப்பட்டுள்ள அமைப்புகள் (ஐநா சபை போன்றவை) இந்தத் தருணத்தில் தமது வரலாற்று ரீதியான தலையீட்டைச் செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக வழங்கக்கூடிய எந்தவொரு ஒத்துழைப்பையும், எமது நாடு சிறியதாக இருந்தாலும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )