
தபால் ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஆகியவை நாளை மாலை 4.00 மணி முதல் சேவையை விட்டு வெளியேறி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளன.
மேலதிக நேரக் கொடுப்பனவுகள், கட்டுப்பாட்டு அலுவலகங்கள் மற்றும் கணக்கு அலுவலகங்களில் அதிகாரிகளின் வருகை , புறப்பாட்டை கைரேகை இயந்திரத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்களை வழங்குவது என 19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
வேலைநிறுத்தம் நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திலிருந்து போராட்டம் தொடங்க வுள்ளதாகவும் நாடு முழுவதும் உள்ள தபால் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகங்களில் நள்ளிரவு 12.00 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படும் எனவும் கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இதேவேளை அஞ்சல் அலுவலகத்துடன் தொடர்புடைய 3,354 உப அஞ்சல் அலுவலகங்களின் பொற்பாதிகாரிகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்க மாட்டார்கள் என தபால் மாஅதிபர் ருவன் சத்குமார கூறுகிறார்.
இதனால் பொதுமக்கள் இந்த அலுவலகங்களில் நாளை சேவைகளைப் பெறலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணியால் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அஞ்சல் பொருட்களை வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் தபால் மாஅதிபர் ருவன் சத்குமாரவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

