
ரணில் விக்ரமசிங்க, சற்று முன்பு சிறைச்சாலை பஸ்ஸில் மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று நேரத்திற்கு முன்பு சிறைச்சாலை பஸ்ஸில் மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி கூடியிருந்தவர்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி வகித்தபோது ,உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நியூயார்க் சென்ற ரணில்விக்கிரமசிங்க , அங்கிருந்து இங்கிலாந்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள செல்வதற்காக ,அரசு நிதியைப் பயன்படுத்தியதாகவும் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை கடந்த ஜூன் 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சிஐடி சமர்ப்பித்தது.
பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் , இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க சிஐடி விக்ரமசிங்கவை இன்று திணைக்களத்திற்கு அழைத்தது.
அவர் இன்று காலை 9 மணியளவில் சிஐடி தலைமையகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தனது மனைவி தனது சொந்தப் பணத்தில் பயணச் செலவுகளை செய்ததாகவும் , எந்த அரசு நிதியும் பயன்படுத்தப்படவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க வாதிட்டார்.
இருப்பினும், ரணில் விக்ரமசிங்கே தனது தனிப்பட்ட பயணத்திற்காக அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தியதாகவும், அவரது மெய்க்காப்பாளர்களுக்கும் அரசு பணம் செலுத்தியதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியது.
நாட்டின் வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவது இதுவே முதல் முறை.

